தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தம்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேற்று பால்டால் மற்றும் பஹல்கம் ஆகிய வழிகளில் அமர்நாத் யாத்திரைப் பயணம் மேற்கொள்ள தடை செய்யப்பட்டது.

எனினும், தற்போது இமயமலையில் உள்ள புனித குகைக் கோயிலில் தட்பவெப்பம் வறட்சியாகக் காணப்படுகிறது. அதனால் அங்கு ஹெலிகாப்டர் சேவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரண்டு யாத்ரீகர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். இதன் காரணமாக கடந்த 2ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இப்போது வரை உயிரிழந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 1.10 லட்சம் யாத்ரீகர்கள் அமர்நாத் லிங்கத்தை தரிசித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 2,422 யாத்ரீகர்களைக் கொண்ட 10வது பிரிவு அடிவார முகாமில் இருந்து பலத்த பாதுகாப்புக்கிடையில் நேற்று புறப்பட்டது.

28 வீரர்கள் மீட்பு

அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை நிலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 28 எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கினர்.

இதைத் தொடர்ந்து நேற்று இந்திய விமானப் படை உதவி யுடன் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆயுதங்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறினார்.

6 மாத குழந்தை பலி

கொல்கத்தாவில் நேற்று முன்தினம் தொடங்கி, கன மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய கொல்கத்தாவில் நேற்று காலை 6 மாத ஆண் குழந்தை ஒன்று மழை நீரில் அடித்து வரப்பட்டு மயக்க நிலையில் கிடந்தது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அக் குழந்தை வழியிலேயே இறந்தது.

விசாரணையில், அருகில் உள்ள முக்தராம்பாபு தெருவில் அக்குழந்தையின் பெற்றோர் நடைபாதையில் வசிப்பதாகவும், நேற்று அதிகாலை 3 மணியளவில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருக்கும்போது, குழந்தை மழைநீரில் அடித்து வரப்பட்டது தெரிய வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

கொல்கத்தாவில் நேற்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 144 மி.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. படிப்படியாக மழை குறையும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொல்கத்தாவில் நேற்று பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை. திறக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர் வருகை குறைவாகவே இருந்தது. நகரில் பல்வேறு இடங்களில் மொத்தம் 340 மோட்டார் பம்ப் மூலம் மழைநீர் வெளியேற்றப்படுவதாக மாநாகராட்சி கூறியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in