Published : 09 Sep 2019 07:09 PM
Last Updated : 09 Sep 2019 07:09 PM

கேரளாவில் கொடிய விலங்குகள் நடமாடும் காட்டில் ஜீப்பிலிருந்து தவறி சாலையில் விழுந்த சிறுகுழந்தை: காப்பாற்றிய வனத்துறையினர்  

திருவனந்தபுரம்

செப்டம்பர் 8ம் தேதியன்று கேரளா இடுக்கியில் மூணாறு-மரையூர் காட்டுப்பகுதி நெடுஞ்சாலையில் ஜீப் ஒன்று வேகமாகச் சென்ற போது திருப்பம் ஒன்றில் பெற்றோர் உறங்கிக் கொண்டிருந்த போது தாயின் மடியிலிருந்து சிறு குழந்தை ஒன்று தவறி சாலையில் விழுந்தது. அந்தக் குழந்தை இன்று உயிருடன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் சேர்க்கப்பட்டதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

அமைதியான அந்த இரவை கிழிக்கும் விதமான ஓலம் ஒன்று எழ ஜீதேந்திரநாத், சிவதாஸ் ஆகிய வனத்துறை அதிகாரிகள் தலைமையிலான குழு ஒன்று சாலையில் தவழும் குழந்தை ஒன்று தலையிலும் மூக்கிலும் ரத்தம் வழிய கிடந்த காட்சியில் உறைந்து போயினர்.

இந்தப் பெண் குழந்தை தாயின் மடியிலிருந்து விழுந்துள்ளது, தாய் தந்தை இருவருமே நல்ல உறக்கத்தில் இருந்ததால் குழந்தை கீழே விழுந்தது தெரியவில்லை. குழந்தை கீழே விழுந்த மூணார்-மரையூர் சாலையில் யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகம். அந்த இடத்தில் ஒரு கூர்மையான திருப்பம் உள்ளது. அதில் ஜீப் வளையும் போது குழந்தை கீழே விழுந்திருக்கிறது.

“முதலில் குழந்தையை யாரோ இங்கு கொண்டு வந்து போட்டு விட்டு சென்று விட்டனர் என்றே நினைத்தோம். பிறகு சிசிடிவி கேமராவை ஆராய்ந்த போதுதான் அந்த வழியே சென்ற ஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை என்பது தெரியவந்தது. அந்தக் குழந்தை டிக்கெட் கவுண்டரை நோக்கி தவழ்ந்து வந்தது, காரணம் அங்கு வெளிச்சம் இருந்தது” என்று மூணாறு வனத்துறை வார்டன் ஆர்.லெஷ்மி தெரிவித்தார்.

செப்.8ம் தேதி ரத்தத்தை உறைய வைக்கும் இந்தக் காட்சி 9.42 மணிக்குப் பதிவாகியுள்ளது. அதாவது குழந்தை தவழ்ந்து வந்து ஒரு கம்பியை பிடித்து எழ முயன்றது. பிறகு தன் முயற்சி பலனளிக்காமல் அது மீண்டும் தவழ்ந்து செக்போஸ்டை நோக்கிச் சென்றுள்ளது.

காப்பாற்றப்பட்ட குழந்தை உடனே மூணாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட காவல்துறையினர் இந்தச் செய்தியை அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பினர்.

ஜீப்பிலிருந்து குழந்தை தவறி விழுந்தது தெரியாமல் தூங்கிய பெற்றோர் சதீஷ் மற்றும் சத்தியபாமா இருவருக்கும் ஒரு மணி நேரம் சென்றுதான் குழந்தை காணாமல் போனது தெரியவந்துள்ளது. அதாவது 40 கிமீ தூரம் சென்ற பிறகுதான் தெரியவந்துள்ளது. பழனிக்குச் சென்று விட்டு குடும்பத்துடன் இவர்கள் கம்பிலிக் கண்டம் திரும்பியதாகத் தெரிகிறது.

குழந்தையைக் காணாமல் கண்ணீரும் கம்பலையுமாக அருகில் உள்ள வெள்ளத்தூவல் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். அங்கு குழந்தை பாதுகாப்பாக உள்ளதாக பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது.

பெற்றோரின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பிறகு அதிகாலை 1 மணியளவில் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x