

பெங்களூரு
இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ட்விட்டர் உள்ளிட்ட எந்த சமூக வலைதளக் கணக்கும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் காண,கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, 'இஸ்ரோ' கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைக் காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு வந்தார்.
அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ - மாணவியரும் பெங்களூரு வந்தனர். சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை, தரையிறங்கும் முன்பாக திடீரென லேண்டருடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
லேண்டர் குறித்த தகவல் நேற்று வெளியானது. எனினும் சிக்னல் இணைப்பு இன்னமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சந்திரயான் -2 குறித்த பல தகவல்களை இஸ்ரோ தலைவர் சிவனின் ட்விட்டர் கணக்கு எனக்கூறி பதிவிடப்பட்டு வருகிறது. ஆனால் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு சமூக வலைதளங்களில் எந்தக் கணக்கும் இல்லை என நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சமூக வலைதளங்களில் இஸ்ரோ தலைவர் சிவனின் புகைப்படத்துடன் சில போலிக் கணக்குகள் உலா வருகின்றன. இஸ்ரோ தலைவர் சிவனுக்கு எந்த சமூக வலைதளங்களிலும் கணக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
போலியான பெயரில் சமூக வலைதளங்களில் வரும் தகவல் எதுவும் நம்பத்தகுந்தது அல்ல. அனைத்தும் தவறானவை. இஸ்ரோ குறித்த விவரங்களை இஸ்ரோவின் அதிகாரபூர்வ கணக்கில் சென்று காணலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.