Published : 09 Sep 2019 05:22 PM
Last Updated : 09 Sep 2019 05:22 PM

நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடும் குழந்தைகளுக்கு கவுரவம்; ஒருநாள் காவல் ஆணையர்களாகப் பொறுப்பேற்பு

பெங்களூரு

நோய்வாய்ப்பட்ட ஐந்து குழந்தைகளை கவுரவம் செய்யும் விதமாக, அவர்கள் பெங்களூரு நகரத்தின் ஒருநாள் காவல் ஆணையர்களாகப் பொறுப்பேற்ற நிகழ்வு இன்று நடைபெற்றது.

நகரக் காவல்துறை மற்றும் மேக் எ விஷ் ஃபவுண்டேஷனின் சிறப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற குழந்தைகளான ரூத்தன்குமார், முகமது சாஹிப், சயீத் இமாத், ஷ்ரவானி மற்றும் அர்பத் பாஷ் ஆகிய ஐந்து பேரும் பெங்களூரு நகரத்தின் ஒருநாள் காவல்துறை ஆணையர்களாகப் பொறுப்பேற்றனர்.

முன்னதாக, காவல் படையினர் அணிவகுப்பு மற்றும் மோப்ப நாய்களின் அணிவகுப்பு என காவல்துறையில் புதிதாகப் பொறுப்பேற்கும் ஆணையருக்கு வழங்கப்படும் மரியாதைகள் அனைத்தும் வழங்கப்பட்டன. தங்கள் புதிய பதவிக்காக உற்சாகமடைந்த இந்தக் குழந்தைகள் இத்தகைய ஓர் அரிய வாய்ப்புக்காக மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்தனர்.

''பிற்காலத்தில் நீங்கள் ஒரு காவல் அதிகாரியாக வந்தால் என்ன செய்வீர்கள்'' என்று குழந்தைகளிடம் கேட்கப்பட்டது. ​​அதற்கு அர்பத் என்ற சிறுவன், ''கெட்டவர்களைச் சிறையில் அடைப்பேன்'' என்று பதிலளித்தார்.

பெங்களூரு நகர காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் இந்த முயற்சியைப் பற்றி கூறுகையில், ''சில நாட்களுக்கு முன்பு மேக் எ விஷ் எ விஷ் ஃபவுண்டேஷன் ஆர்வலர்கள் சிலர் எங்களை அணுகினர். நோய்வாய்ப்பட்டு தங்கள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஏதாவது ஒரு காவல் நிலையத்தைப் பார்வையிட விரும்புவதாகக் கூறினர். குழந்தைகளுக்கு உதவுவது எங்கள் கடமை என்று கூறினோம். நாங்கள் அவர்களுக்கு உண்மையான துப்பாக்கிகளையும் கை விலங்குகளையும் கொடுத்தோம். அவர்கள் உண்மையிலேயே உற்சாகமாக இருந்தனர்'' என்று தெரிவித்தார்.

'மேக் எ விஷ்' ஃபவுண்டேஷனைச் சேர்ந்த கங்காதர், ''நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சியில் இறங்கினோம். அப்போது குழந்தைகள் ஒரு காவல் நிலையத்தைப் பார்வையிட விரும்புவதைத் தெரிந்துகொண்டோம். அதன் பின்னர் எங்கள் அமைப்பு காவல் ஆணையரை அணுகியது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x