

லக்னோ
ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் தனது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் முதல்வராகப் பதவி வகித்தவர் கல்யாண் சிங். வாஜ்பாய் மற்றும் அத்வானி காலத்தில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த கல்யாண் சிங் ஆட்சிக் காலத்தில் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்து, அவரது அரசுப் பதவி நீக்கம் செய்யப்பட்டது.
87 வயதான அவர் ராஜஸ்தான் மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் செப்டம்பர் 3-ம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது மகன் ராஜ்வீர் சிங் எடவா தொகுதி பாஜக எம்.பி.யாக உள்ளார். பேரன் சந்தீப் சிங் உத்தரப் பிரதேச மாநில அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.
பதவிக்காலம் முடிந்த நிலையில் கல்யாண் சிங் இன்று மீண்டும் முறைப்படி பாஜகவில் இணைந்தார். லக்னோவில் உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் சுதந்திரதேவ் சிங் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். அப்போது கல்யாண் சிங்கின் மகன் மற்றும் பேரனும் உடன் இருந்தனர்.