அசாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் தூய்மைப்படுத்தப்படும்: அமித் ஷா திட்டவட்டம்

அசாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் தூய்மைப்படுத்தப்படும்: அமித் ஷா திட்டவட்டம்
Updated on
1 min read

குவாஹாட்டி,

அசாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசமும் சட்டவிரோத குடியேறிகள் இல்லாமல் தூய்மைப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக குடியேறுபவர்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்தும் முயற்சியாக தேசிய குடிமக்கள் பட்டியலை மத்திய அரசு தயாரிக்கிறது. அசாமில் இது முதலில் அமலாகியுள்ளது.

இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும் அசாமில் குடிமக்கள் பட்டியல் தயாராக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அசாமில் வசிக்கும் 19 லட்சம் மக்கள் விடுபட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு ஓட்டுரிமைகூட இருக்கிறது. தேசிய குடிமக்கள் பட்டியல் அசாமில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 2 நாள் பயணமாக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை உறுதிபடத் தெரிவித்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "தேசிய குடிமக்கள் பட்டியல் குறித்து அனைத்து மாநிலங்களும் கலக்கத்தில் உள்ளன. அசாம் மாநிலம் என்.ஆர்.சி. தவறு என்று நினைக்கிறது. இதனால் நிறையபேர் விடுபடும் அபாயம் இருக்கிறது எனக் கருதுகிறது. அசாமைவிட சிறு மாநிலங்கள், பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் பகுதிகளுக்கு படை எடுக்கலாம் என அஞ்சுகிறேன்.

இந்த நேரத்தில் நான் ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்த்த விரும்புகிறேன். அசாம் குடிமக்கள் பட்டியலில் இடம்பெறாதவற்கள் அசாமில் மட்டுமல்ல வேறு எந்த மாநிலத்திலும் வசிக்க முடியாது.

அசாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசமும் சட்டவிரோதிகள் குடியேறிகள் இல்லாமல் தூய்மைப்படுத்தப்படும். அதற்கான திட்டம் எங்களிடம் இருக்கிறது. அனைத்து மாநிலங்களையும் இதில் நம்பிக்கை கொள்ளச் செய்வோம்.

தேசிய குடிமக்கள் பட்டியலில் நிறைய பேர் விடுபட்டிருப்பதாக சிலர் உணர்கின்றனர். சட்டவிரோத குடியேறிகள் அசாமில் மட்டுமல்ல வேறு எந்த மாநிலத்திலும் இருக்க இயலாது.

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் இல்லா மாநிலங்களாக மாற்ற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு" எனக் கூறியுள்ளார்.

என்.ஆர்.சி.,யை எதிர்க்கும் அசாம் பாஜகவினர்..

அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது. ஆனால், அங்குள்ள பாஜகவின் ஒரு பிரிவினர் என்.ஆர்.சி.,க்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்.ஆர்.சி.யி.,ல் வங்கதேச இந்துக்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அசாம் மக்கள்தொகையில் 18%. பாஜகவின் மிகப்பெரிய வாக்குவங்கி. அதனாலேயே இதற்கு அசாமில் பாஜகவினரே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in