

அமராவதி
ஆந்திராவில் கோதாவரியில் பயங்கரப் பாய்ச்சலோடு வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் ஆற்றங்கரையோர கிராம மக்கள் வெளியேறுமாறு இன்று இரண்டாவது முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோதாவரி நதியில் வெள்ள ஓட்டம் 14 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் நதி பெருக்கெடுத்து பாய்ந்தோடத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த தோவலேஸ்வரத்தில் சர் ஆர்தர் காட்டன் தடுப்பணை அதிகாரிகள் கூறுகையில், ''கோதாவரி நதியில் வெள்ள ஓட்டம் 14 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் வெள்ளநீர் ஓட்டத்தின் தன்மை கடுமையாக இருக்கும். நதியின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு நேற்றே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், சிலர் கிராமங்களை விட்டு வெளியேறாத நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறை எச்சரிக்கை சிக்னல் இன்று விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ள நீரின் ஓட்டம் குறைய வாய்ப்ப்பில்லை. தடுப்பணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து தொடர்ந்து வெள்ள நீரோட்டம் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ள அச்சுறுத்தல் இருக்கும் என்பதால் மக்கள் உரிய பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் படகுகளைப் பயன்படுத்த வேண்டாம் என மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஆணையர் கண்ணா பாபு கூறுகையில், ''தடுப்பணையின் பின்புறத்திலும் அதன் நீரோட்டப் பகுதியிலும் ஏராளமான கிராமங்கள் நீரில் மூழ்கி வருகின்றன. இதனால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக எட்டு நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து தற்போது 1500 பேர் இதில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள போலவரம் புராஜெக்ட் மண்டலத்தில் குறைந்தது 19 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதேபோல கிழக்கு கோதாவரியில் தேவிப்பட்டணம் மண்டலத்தில் 16 கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இரு மாவட்டங்களிலும் வெள்ளம் மூழ்கிவரும் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நதியின் வெள்ளம் பயங்கரமாக ஓடிக்கொண்டிருப்பதால், பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வெளியேறும் மக்கள் படகுகளைப் பயன்படுத்த வேண்டாம்'' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், சீராக இருந்த கிருஷ்ணா நதியில் வெள்ள நீரோட்டம் திடீரென அதிகரித்து தற்போது ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் 2.32 லட்சம் கனஅடி நீர் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.