ஒடிசாவின் முதல் பழங்குடியினப் பெண் பைலட் அனுப்ரியா லக்ரா: முதல்வர் நவீன் பட்நாயக் பெருமிதம்

ஒடிசாவின் முதல் பழங்குடியினப் பெண் பைலட் அனுப்ரியா லக்ரா: முதல்வர் நவீன் பட்நாயக் பெருமிதம்
Updated on
1 min read

புவனேஸ்வர்,

மாவோயிஸ்ட் தாக்குதல்களுக்காகவே அதிகம் அறியப்பட்ட ஒடிசாவின் மல்கான்கிரி மாவட்டத்திலிருந்து பழங்குடியினப் பெண் ஒருவர் பைலட்டாகி ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு மாநில முதல்வர் நவீன் பட்நாய்க் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் அனுப்ரியா லக்ரா. மல்கான்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், புவனேஸ்வரில் உள்ள கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால், பைலட் ஆவதே அவரின் இலக்காக இருந்ததால் பொறியியல் படிப்பைப் பாதியில் துறந்துவிட்டு ஏவியேஷன் அகாடமியில் சேர்ந்தார். இந்நிலையில் அவருக்கு தனியார் விமான நிறுவனத்தில் பைலட் வேலை கிடைத்துள்ளது.

அனுப்ரியாவின் தந்தை ஒடிசா காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றுகிறார். அவரின் தாயார் இல்லத்தரசி. தங்கள் மகளின் வெற்றி குறித்து பெற்றோர் கூறும்போது, "சிறு வயதிலிருந்தே அனுவின் கனவுக்கு நாங்கள் தடை போட்டதில்லை. அவருடைய கனவுக்கு எங்களால் எப்படி உறுதுணையாக இருக்க முடியும் என்பதை மட்டுமே உறுதி செய்தோம்" என்றனர்.

முதல்வர் நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனுப்ரியா லக்ராவின் வெற்றியைப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறேன். கடுமையான உழைப்பு மூலம் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி பலருக்கும் ஊக்கமாக அமையும்" எனப் பதிவிட்டுள்ளார்.

-ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in