Published : 09 Sep 2019 07:23 AM
Last Updated : 09 Sep 2019 07:23 AM

முக்கிய வழக்குகளில் வாதாடிய ராம் ஜேத்மலானி

புதுடெல்லி

மறைந்த ராம் ஜேத்மலானி மிக முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் வாதாடி இருக்கிறார்.

தமது வாதத் திறமையால் பல சிக்கலான வழக்குகளில் இருந்து தமது கட்சிக்காரர்களுக்கு அவர் விடுதலை பெற்று தந்துள்ளார். இருந்தபோதிலும், 1959-ம் ஆண்டு நடைபெற்ற கடற்படை கமாண்டர் நானாவதி வழக்கில் ஆஜராகி வாதாடிய போதுதான் நாடு முழுவதும் ராம் ஜேத்மலானி பிரபலமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராகி வாதாடியிருக்கிறார் ராம் ஜேத்மலானி.

குறிப்பாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்ட பாதுகாவலர்களுக்கு ஆதரவாக வாதாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதே போல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் களுக்காக கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வாதாடினார்.

திமுக எம்.பி. கனிமொழி தொடர்புடைய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு, பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் தொடர்புடைய கால்நடை தீவன ஊழல் வழக்கு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடர்புடைய சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு, பாஜக மூத்த தலைவர் அத்வானி தொடர்புடைய ஹவாலா வழக்கு, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்புடைய சொத்துக்குவிப்பு வழக்கு ஆகியவற்றில் ராம் ஜேத்மலானி ஆஜராகி (குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில்) வாதாடியிருக்கிறார்.

அரசியல் வாழ்க்கை

வழக்கறிஞர் தொழிலில் சிறந்து விளங்கிய ராம் ஜேத்மலானி, அரசியலிலும் தனி முத்திரை பதித்தவர் ஆவார். பாஜகவின் முந்தைய வடிவமான பாரதிய ஜன சங்கத்திலும், பின்னர் பாஜகவிலும் இணைந்து பணியாற்றிய அவர், 1988-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட் டார். பிறகு, 1996-ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமை யிலான அமைச்சரவையில் சட்டத் துறை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

எனினும், கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவிலிருந்து விலகிய ராம் ஜேத்மலானி, 2004-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2010-ம் ஆண்டு பாஜகவில் மீண்டும் இணைந்த அவர், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே, பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த காரணத்தால் 2013-ம் ஆண்டு பாஜகவிலிருந்து ராம் ஜேத்மலானி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தீவிர அரசியலில் இருந்தும் விலகினார்.

தலைவர்கள் இரங்கல்

இந்நிலையில், ராம் ஜேத்மலானி யின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி யில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி மறைந்த செய்தி அறிந்து சோகம் அடைந்தேன். பொது பிரச்சினைகள் குறித்து துணிச்சலாக கருத்து கூறும் பண்புடையவர் அவர். மிகவும் திறமையான, தேச பக்தி கொண்ட ஒரு வழக்கறிஞரை நமது தேசம் இழந்துவிட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி யில், ‘‘ராம் ஜேத்மலானி நகைச் சுவை உணர்வு மிக்கவர். எந்த ஒரு விவகாரத்திலும் தனது மனதில் பட்டதை துணிச்சலாகவும், வெளிப் படையாகவும் கூற தயங்காதவர். நாடாளுமன்றத்திலும், நீதித்துறை யிலும் சிறந்த பங்களிப்பை நல்கியவரை நமது நாடு இழந்துள்ளது’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x