Published : 08 Sep 2019 07:17 PM
Last Updated : 08 Sep 2019 07:17 PM

ராம் ஜெத்மலானி மறைவு: பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

பிரதமர் மோடி இன்று ராம் ஜெத்மலானி மறைவுக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

புதுடெல்லி,

மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி மறைவுக்கு அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 95. கடந்த சில மாதங்களாகவே அவர் உடல்நலக் குறைவால் நலிவுற்ற நிலையில் இருந்தார். வீட்டிலிருந்தவாறே அவர் சிகிச்சை பெற்றுவந்தார். வரும் 14-ம் தேதி ராம் ஜெத்மலானி தனது 96-வது பிறந்த நாளைக் கொண்டாட விருந்த நிலையில் மறைந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவரது உயிர் பிரிந்தது.

ஜெத்மலானி மறைவுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் உரையில், ''பொதுப் பிரச்சினைகளில் தனது கருத்தை தனக்கே உரித்தான பாணியில் தெரிவிப்பதில் வல்லவர். ஒரு சிறந்த வழக்கறிஞரை இந்த தேசம் இழந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று பதிவு செய்துள்ள இரங்கல் ட்வீட்டில் ''ராம் ஜெத்மலானியுடன் பலமுறை கலந்துரையாடும் வாய்ப்புப் பெற்றதை பாக்கியமாகக் கருதுகிறேன். அவர் நகைச்சுவையானவர், தைரியமானவர், எந்தவொரு விஷயத்திலும் தைரியமாக தன்னை வெளிப்படுத்துவதில் இருந்து ஒருபோதும் விலகிச் செல்லவில்லை. நெருக்கடி காலகட்டத்தில் அவர் மக்கள் உரிமைகளுக்காகப் போராடியவிதம் என்றும் நினைவுகூரப்படும். தேவையுள்ளவர்களுக்கு உதவுவது அவருடைய இயல்பு

இந்த சோகமான தருணங்களில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பல அபிமானிகளுக்கும் எனது இரங்கல். அவர் இங்கே இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவரது முன்னெடுத்த பணிகள் தொடர்ந்து இயங்கும்! ஓம் சாந்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராம் ஜெத்மலானியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி ராம் ஜெத்மலானி இல்லத்திற்கு நேரில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது குறித்து பிரதமர் அலுவவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

"பிரதமர் நரேந்திர மோடி மறைந்த ராம் ஜெத்மலானிக்கு அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார். ஜெத்மலானியின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்"

இவ்வாறு பிரதமர் அலுவலக அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x