

புதுடெல்லி,
மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானியின் மறைவு வருத்தமளிக்கிறது. பொதுப் பிரச்சினைகளில் தனது கருத்தை தனக்கே உரித்தான பாணியில் தெரிவிப்பதில் வல்லவர். ஒரு சிறந்த வழக்கறிஞரை இந்த தேசம் இழந்துவிட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல் குறிப்பில், "ராம் ஜெத்மலானியுடன் பலமுறை கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றதை பாக்கியமாகக் கருதுகிறேன். அவர் மறைவு ஏற்படுத்தியுள்ள சோகமான தருணத்தில் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மறைந்தாலும்கூட அவருடைய பணிகள் என்றும் நிலைத்திருக்கும்.
ராம் ஜெத்மலானியுடைய சிறந்த பண்பே மனதில் தோன்றியதை மறைகாமல் பேசும் குணம். நெருக்கடி காலகட்டத்தில் அவர் மக்கள் உரிமைகளுக்காகப் போராடியவிதம் நினைவுகூரப்படும். தேவையுள்ளவர்களுக்கு உதவுவது அவருடைய இயல்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராம் ஜெத்மலானியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார், பின்னர், "ராம் ஜெத்மலானியின் மறைவு ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருடை சட்ட நிபுணத்துவம் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி" என்று கூறினார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், "ராம் ஜெத்மலானியின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் கிரிமினல் சட்டத்தை செதுக்கியத்தில் அவருக்கு பெரும் பங்கு இருக்கிறது. அவர் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அவரின் பெயர் இந்திய சட்ட வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.