காஷ்மீரில் ராணுவக் குவிப்பு தீவிரவாதிகளை ஒழிக்கவே; மக்களைக் கட்டுப்படுத்த அல்ல: அஜித் தோவல் விளக்கம்

காஷ்மீரில் ராணுவக் குவிப்பு தீவிரவாதிகளை ஒழிக்கவே; மக்களைக் கட்டுப்படுத்த அல்ல: அஜித் தோவல் விளக்கம்
Updated on
2 min read

புதுடெல்லி,

காஷ்மீரில் நிலவும் ராணுவக் குவிப்பு தீவிரவாத நடமாட்டத்தைத் தடுக்கவே தவிர மக்களைக் கட்டுப்படுத்த அல்ல என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் படைகளைக் குறைப்பது பாகிஸ்தானின் கைகளிலேயே உள்ளது என்றும் அவர் கூறினார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு படைகள் குவிக்கப்பட்டுள்ளதை சர்வதேச சமூகங்கள் பலவும் பிரச்சினையாக சுட்டிக்காட்டிவரும் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (சனிக்கிழமை) இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், "ஜம்மு - காஷ்மீரில் ராணுவம் அத்துமீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அங்கு இன்னமும் படைகள் குவிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தவிர மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டுமென்பது அல்ல.

சட்டம் ஒழுங்கு விவகாரத்தை உள்ளூர் போலீஸும் மத்தியப் படைகளுமே கவனிக்கின்றன. ராணுவத்துக்கு இதில் தொடர்பில்லை.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் 10 காவல் சரகங்களில் மட்டுமே சில கெடுபிடிகள் இருக்கின்றன. தரைவழி தொலைபேசி இணைப்புகள் 100% சீரமைக்கப்பட்டுவிட்டன. மொத்தமுள்ள 199 காவல் நிலையங்களில் 10 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே தடை உத்தரவு அமலில் உள்ளது" என்றார்.

பிரச்சினையைத் தூண்டும் பாகிஸ்தான்..

மேலும் அவர் பேசுகையில், ''பாகிஸ்தான் தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு அமைதியைச் சீர்குலைக்கத் திட்டமிட்டுகிறது. இதுவரை 230 தீவிரவாதிகளை அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம்" என்றார்.

காஷ்மீரிகள் வரவேற்கின்றனர்

கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று மக்கள் கருத்தை அஜித் தோவல் அறிந்து வருகிறார்.

அது குறித்து அவர், "இதுவரையிலான சுற்றுப்பயணத்தில் பெரும்பாலான காஷ்மீர் மக்கள் சிறப்பு அந்தஸ்து ரத்தை வரவேற்பதை அறிந்துகொண்டேன். அவர்கள் புதிய வாய்ப்புகளை, பொருளாதார வளர்ச்சியை, வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒருசில விஷமிகளே பிரச்சினை செய்கின்றனர்" என்றார்.

தடையை முழுமையாக விலக்க பாக். ஒத்துழைப்பு தேவை..

"பிராந்தியத்தின் எந்த ஒரு பகுதியிலும் தடை இல்லாமல் மக்கள் இயல்பாக நடமாட வழிவகை செய்யவே நாங்களும் விரும்புகிறோம். ஆனால், அது பாகிஸ்தான் கைகளில்தான் உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யாமல் இருக்க வேண்டும், அங்கிருந்துகொண்டே இங்கே உள்ள தங்களின் கைக்கூலிகளுக்கு உத்தரவு போடாமல் இருக்க வேண்டும். அப்படி பாகிஸ்தான் நடந்து கொண்டால் நாங்களும் முழுமையாகத் தடையை நீக்குவோம்.

இப்போதைக்கு 92.5% நிலப்பரப்பு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் இயல்பாக வாழும் வகையில் உள்ளது.

ஆனால் எல்லையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் சிக்னல் கோபுரங்கள் அமைத்து அங்கிருந்து தனது கைக்கூலிகளை பாகிஸ்தான் இயக்குகிறது. சில தகவல்களை நாங்கள் இடைமறித்துக் கேட்டோம். அப்போது ஒரு குரல், "ஏன் இன்னும் அங்கு ஆப்பிள் ட்ரக்குகள் சுலபமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அதைத் தடுக்க முடியாதா? உங்கள் கைகளுக்கு வளையல் அனுப்ப வேண்டுமா என்ன?" என வினவுகிறது.

பாகிஸ்தானின் செயல் இப்படியிருக்கும்போது எப்படி படைகளைக் குறைக்க முடியும்" என்று தோவல் கூறியுள்ளார்.

-ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in