காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: காயமடைந்த 2 வயது குழந்தைக்கு டெல்லியில் சிகிச்சை; ஏர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல ஏற்பாடு

ஸ்ரீநகர் மாவட்ட நீதிபதி ஷாகித் சவுத்ரி
ஸ்ரீநகர் மாவட்ட நீதிபதி ஷாகித் சவுத்ரி
Updated on
1 min read

ஸ்ரீநகர்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த 2 வயது குழந்தை சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்படுகிறார். இதனை ஸ்ரீநகர் மாவட்ட நீதிபதி ஷாகித் சவுத்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் பழக்கடை நடத்தி வருபவர் ஹமீதுல்லா ரத்தேர். இவரது வீடு தங்கேர்புரா பகுதியில் உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர், ஹமீதுல்லா பழக் கடையை திறக்கக்கூடாது என தீவிரவாதிகள் அச்சுறுத்தியுள்ளனர்.

சட்டப்பிரிவு 370 ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிரான தங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடையை மூடும்படி அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

ஆனால் அதன் பின்னரும்கூட ஹமீதுல்லா தனது கடையைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் தங்கேர்பூராவில் உள்ள அவரின் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் 2 வயது குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர். குழந்தை அஸ்மா படுகாயமடைந்தார்.

இந்நிலையில் குழந்தையை சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீநகர் மாவட்ட நீதிபதி தனது ட்விட்டர் பக்கத்தில், "குழந்தை அஸ்மா தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். அவரை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அவருக்கு பிரார்த்தனை செய்யுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த தாக்குதலை ஜம்மு காஷ்மீர் காவல்துறை கடுமையாகக் கண்டித்துள்ளது. இது கருணையற்ற தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளது.

உளவுத் துறை எச்சரிக்கை:

காஷ்மீர் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளைத் தூண்டிவிடுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

- ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in