Published : 07 Sep 2019 11:58 AM
Last Updated : 07 Sep 2019 11:58 AM

குடையுடன் பாடம் கற்கும் குழந்தைகள்: மழையினால் கூரை ஒழுகும் ஜார்க்கண்ட் பள்ளிகளின் அவலம்

கோரபந்தா (ஜார்க்கண்ட்)

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மழையினால் ஒழுகும் பள்ளிக் கூரைகளைக் கூட மாற்றாமல் வகுப்பறையில் குடையுடன் பாடம் கேட்கும் அவலத்திற்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சாந்தால் பழங்குடியினர் அதிகம் வசித்துவரும் இயற்கை எழில்மிக்க மலைகள் சூழ்ந்த ஒரு மாநிலம் ஜார்க்கண்ட். ராஞ்சியை தலைநகராகக்கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையே தொடர்கிறது. ஏழைக்குழந்தைகள் பள்ளிக்கு வரும் சூழ்நிலையே அரிதாக உள்ள நிலையில் பள்ளிக் கட்டமைப்புகள் போதிய வசதியின்றி காணப்படுகின்றன.

கோரபந்தா மாவட்டத்தைச் சேர்ந்த முரேதாகுரா கிராமத்தின் தொடக்கப்பள்ளியின் கூரைகள் மழைக்கு ஒழுகுவதால் மாணவர்கள் மிகவும் சிரமத்துடன்தான் கல்வி பயில வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர் ரதிகாந்த் பிரதான் இதுகுறித்துக் கூறுகையில், ''மழைக்கு கூரைகள் ஒழுகுவதால் எதிர்பாராத சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே மின்சாரத்தை நிறுத்திவிட்டோம். அரசாங்கம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். எங்கள் பள்ளியில் ஏழு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. அதில் மூன்று வகுப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

வகுப்பறையில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு மழை இடையூறாக உள்ளது. இங்கு 170 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கு புதிய பள்ளிக் கட்டிடம் ஒன்றைக் கட்டித் தருமாறு ஏற்கெனவே பலமுறை கோரிக்கை வைத்துவிட்டோம்'' என்று ஆசிரியர் ரதிகாந்த் பிரதான் தெரிவித்தார்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் கூறுகையில், ''வகுப்பறையில் மழையினால் நிறைய இடையூறுகளை நாங்கள் சந்திக்கிறோம். எங்கள் பாடப்புத்தகங்களை எல்லாம் இந்த மழை வந்து நாசம் செய்துவிடுகிறது'' என்றார்.

ஏழாம் வகுப்பு படிக்கும் கல்பனா கூறுகையில், ''நான் ஏழாம் வகுப்பு பயில்கிறேன். கூரைகள் உடைந்துவிட்டதால் நாங்கள் குடைகள் கொண்டு வந்து பாடம் கேட்கிறோம்'' என்றார்.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x