Published : 07 Sep 2019 07:34 AM
Last Updated : 07 Sep 2019 07:34 AM

ரஜினி பாஜகவில் சேருவார் என்ற நம்பிக்கை இல்லை: பாஜக பொறுப்பாளர் முரளிதர் ராவ் சிறப்பு பேட்டி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

பாஜகவில் ரஜினிகாந்த் சேருவார் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளரும் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவருமான பி.முரளிதர் ராவ் கூறியுள்ளார். தமிழகத்தின் பாஜக தலைவர் பதவிக்கான அறிவிப்பு தாமதமாவது குறித்த ‘இந்து தமிழ்’ நாளேட்டின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில் இருந்து...

உங்களது பொறுப்பின் கீழ் பணியாற்றிய தமிழிசை சவுந்திரராஜனுக்கு ஆளுநர் பதவி கிடைத்திருப்பது குறித்து தங்கள் கருத்து?

தொடர்ந்து பயணம் செய்து கடுமையாக உழைப்பவர் தமிழிசை என்பது அனைவரும் அறிந்தது. மேலும் அவர் தகவல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் வல்லவர். இதுபோன்றவை அவரது பலம். நம்முடன் பணியாற்றியவருக்கு இதுபோல் ஆளுநர் பதவி எனும் நல்வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி. இதிலும் அவர் எனது பொறுப்பு பணியில் அமைந்த மாநிலத்தவர் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஆளுநர் பதவிக்கானத் தகுதி இதுவரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

அப்படி எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படப்படவில்லை. எம்.எல்.ஏ, எம்.பி போன்ற பதவிகளும் வகிக்காமல் மிகவும் குறைந்த வயதிலும் இப்பதவியை தமிழிசை ஏற்பது சிறப்பு. அவர் தமிழகத்தில் செய்த கடும் உழைப்பிற்கு கிடைத்த பரிசு இது.

தமிழக பாஜக தலைவர் யார் என்பதில் பல்வேறு புரளிகள் வெளியாகி வருகிறதே?

தலைவருக்கானப் பெயரை அறிவிக்காதவரை அது புரளியாகவே இருக்கும். அதில் பலவகை ஊகங்கள் கிளம்புவது இயற்கையே. இப்போது அது குறித்து நான் எவர் பெயரையாவது கூறினால் அந்த ஊகங்கள் வலுக்குமே தவிர குறையாது.

ஊடகங்கள் ஊகித்து வெளியிடும் செய்திகளால் கட்சி தலைமை கவரப்பட்டு தலைவர் பதவிக்கான பெயர் அறிவிப்பு தாமதப்படுத்தப்படுகிறதா?

ஊடகங்கள் ஊகித்து வெளியிடும் நோக்கில் நம் கட்சி ஒன்றும் இதுபோல் வாய்ப்பை உருவாக்கவில்லை. தலைவர் பெயர் விரைவில் வெளியாகும்.

தமக்கே தலைவர் பதவி என தமிழகத்தில் உங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் ஊடகங்கள் வாயிலாக செல்வாக்கை பெற முயல்வது சரியா?

இதுபோல் ஊடகங்கள் மூலமாக தங்கள் செல்வாக்கை உயர்த்தும் பணியில் தலைவர்கள் ஈடுபட வேண்டாம் என இப்பேட்டியின் மூலம் கூறிக்கொள்கிறேன். ஏனெனில், ஊடகங்கள் மதிப்பீடுகளின் அடிப்படையில் தலைவர் பதவிக்கு எவரும் தேர்வு செய்யப்படுவதில்லை.

பாஜகவில் சேராத ரஜினிகாந்த் பெயரும் இதில் அடிபடுகிறதே?

(வாய்விட்டு சிரித்தவர்) ரஜினிகாந்த் எங்கள் கட்சியில் இல்லை. அவர் பாஜகவில் சேர்வார் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. இப்
பதவிக்கு நிலவின் பெயரைக் கூட ஊடகங்கள் ஊகித்து எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இதை வைத்து தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்து வருவதாகக் கருத முடியுமா?

நிச்சயமாக இதுபோன்ற புரளிகளும், ஊகங்களிலும் சிக்குவதை வைத்து தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்திருப்பது நூறு சதவிகிதம் உண்மை எனக் கூற முடியும். ஆனால், தலைவர் பதவிக்கான விஷயத்திற்கு முடிவு வரும். இதில் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவேளை தலைவர் யார் என அறிவிப்பதில் உங்கள் தலைமைக்கு எதுவும் பிரச்சனைகள் உள்ளதா?

இதில் எந்த பிரச்சனையும் இல்லை. முற்றிலுமாக எந்த சிக்கலும் கிடையாது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களவையின் கூட்டணி தொடருமா?

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் வரை அது உள்ளது உள்ளபடி தொடரும். தேர்தலுக்கு முன்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறாது என என்னால் இப்போது கூறவும் முடியாது.

எதிரணியில் இருப்பவர் உள்ளிட்ட கட்சிகளும் உங்கள் கூட்டணியில் புதிய உறுப்பினர்களாகச் சேர்வார்களா?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் பாஜகவின் கதவு திறந்தே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x