

டெல்லி முதல்வராக கிரண் பேடி நியமிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்ததையடுத்து டெல்லி பாஜக தலைவர்கள் பலர் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிலர் கிரண் பேடி முதல்வர் வேட்பாளர் என்றால் ஒத்துழைக்க மாட்டோம் என்றும் வேண்டுமென்றே தோற்றும் விடுவோம் என்றும் மிரட்டியுள்ளதாக ஏஜென்சி செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
பாஜக டெல்லி தலைவர் ஹர்ஷவர்தனிடம் டெல்லி பாஜக தலைவர்கள் இது குறித்து தங்களது அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர் என்றும் உட்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிரண் பேடி அண்ணா ஹசாரே மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யவிடாமல் தடுப்பது காங்கிரஸ் மற்றும் பாஜக என்று தாக்குதல் வைத்தவர் பல முறை பாஜக-வை நேரடியாக விமர்சனம் செய்தவர் கிரண் பேடி என்று கட்சித் தலைவர்கள் நிதின் கட்கரி மற்றும் ஹர்ஷவர்தன் ஆகியோரிடம் கூறியதாகத் தெரிகிறது.
நிதின் கட்கரி பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட டிவிட்டர் கணக்கில் கிரண் பேடியை டெல்லி முதல்வராக்கலாம் என்ற அறிவிப்பு வந்ததையடுத்து பாஜக டெல்லி தலைவர்கள் பலரும் கொதிப்படைந்தனர்.
இதுபற்றி கிரண் பேடியிடம் தொலைக்காட்சி ஒன்று கேட்க அவரோ “35-40 ஆண்டுகள் டெல்லியிலேயே வாழ்ந்து விட்டேன், இப்போது டெல்லி மக்களின் நலனுக்காக வாழ்க்கையை அர்பணிக்க விரும்புகிறேன்” என்று கூறியதும் எரியும் நெருப்பில் எண்ணெய் விட்ட கதையாக உருவெடுத்தது.
மேலும் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் ஹர்ஷ வர்தன் சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டால் டெல்லியில் கிரண் பேடிதான் சிறந்த தேர்வு என்று பாஜகவில் சிலர் வாதாடி வருவதாகவும் கூறப்படுகிறது.