Published : 06 Sep 2019 06:06 PM
Last Updated : 06 Sep 2019 06:06 PM

திஹார் சிறையில் முதல் நாள்: என்ன செய்தார் சிதம்பரம்?

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை வரும் 19-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் நேற்று இரவு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
திஹார் சிறையில் அடைக்கப்படும் முன்பாக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர் அவர் இரவு உணவு வழங்கப்பட்டு தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். பொருளாதார குற்றவாளிகள் வைக்கப்பட்டிருக்கும் 7-ம் எண் கொண்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் கார்த்தி சிதம்பரம் முன்பு இதே சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். மத்திய பிரதேச முதல்வர் அகஸ்டாவெஸ்ட்லண்ட் வழக்கில் அமலாக்கப்பிரிவால் கைது செய்யப்பட்ட கமல்நாத் மருமகன் ரதுல் புரி உள்ளிட்டோரும் இதே சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறை விதிகளின்படி அவருக்கு நூலகம் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதற்கான வசதிகள் மட்டுமே வழங்கப்படும், மற்றபடி தனியான சலுகைகள் ஏதும் வழங்கப்படாது என ஏற்கெனவே சிறை நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதுபோலவே வெஸ்டர்ன் டாய்லெட் வசதியும் நீதிமன்ற அறிவுறுத்தல்படி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மூக்கு கண்ணாடி, மருந்துகள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. அதுபோலவே சிதம்பரத்துக்கு இசட் பாதுகாப்பு வழங்கப்படுவதால் அதனை சிறை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில் சிதம்பரம் திஹார் சிறையில் முதல் நாளில் என்ன செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் சிறை வளாகத்திலேயே நடை பயிற்சி மேற்கொண்டார். பின்னர் தேனீர் அருந்தினார். இதைத்தொடர்ந்து காலை சிற்றுண்டியாக கஞ்சி குடித்தார்.
பின்னர் காலை செய்தித்தாள்களை படித்த அவர், ஆன்மீகம் தொடர்பான சில புத்தகங்களை வாசித்தார்.
பின்னர் அவரை பார்ப்பதற்காக மகன் கார்த்தி சிதம்பரம் வந்திருந்தார். அவரை சந்தித்தார். பின்னர் வழக்கறிஞரையும் அவர் சந்தித்து பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x