

புதுடெல்லி
காஷ்மீர் பிரச்சினையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததாக செயற்பாட்டார் ஷீலா ரஷீத் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இன்று அவர் மீது டெல்லி போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தனர்.
டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழக முன்னாள் மாணவி ஷீலா ரஷீத், இவர் சமூக ஆர்வலராக செயல்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதி வரும் இவர் காஷ்மீரைச் சேரந்தவர். தனது பதிவுகள் மூலம் தொடர்ந்து தேசத்திற்கு எதிராக பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி 'இந்திய ராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போலிச் செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட வேண்டும்' என்று கோரி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்த்தவா ஷீலா ரஷீத்துக்கு எதிராக ஒரு கிரிமினல் புகார் ஒன்றைத் தாக்கல் செய்தார்.
திலக் மார்க் காவல் நிலையத்திலும் வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் திருமதி ரஷீத் மீது புதன்கிழமை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திலக் மார்க் காவல்நிலைய அதிகாரிகள் கூறுகையில், ''370 வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர் காஷ்மீர் நிலைமை குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக ஷீலா ரஷீத் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, 124-ஏ (தேசத்துரோகம்), 153-ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், மற்றும் நல்லிணக்கத்தைக் குலைக்கும்பணிகளில் ஈடுபடுவது), 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவது)'' ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் ஷீலா மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.'' என்று தெரிவித்தார்.
மாணவி ஷீலா ரஷீத்தின் மீது அளிக்கப்பட்ட தேசத் துரோகக் குற்றச்சாட்டுப் புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சிறப்பு விசாரணை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.