பகுத்தறிவாளர் பன்சாரே கொலை வழக்கு: சிறையில் உள்ள மூவரை காவலில் எடுத்து விசாரிக்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு

பகுத்தறிவாளர் பன்சாரே கொலை வழக்கு: சிறையில் உள்ள மூவரை காவலில் எடுத்து விசாரிக்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு
Updated on
2 min read

கோலாப்பூர்

மகாராஷ்ராவைச் சேர்ந்த பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரை சிறப்புப் புலனாய்வுக்குழு காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பன்சாரே, ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் என்றாலும் பகுத்தறிவாளர் என்றே அவர் அறியப்படுகிறார். சமூக சீர்திருத்தவாதியாகவும் களப்பணிகள் ஆற்றிவந்த பன்சாரே கடந்த 2015 பிப்ரவரி மாதம் 20 அன்று அதிகாலை தனது மனைவியுடன் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் பன்சாரே மனைவியும் சுடப்பட்டு காயமடைந்தார்.

பன்சாரே கொலை வழக்கில் விசாரணை மிகவும் தாமதமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாக கடந்த மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்றம் மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸை விமர்சனம் செய்தது.

கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போதும் மும்பை நீதிமன்றம் சமூகத்தில் நன்மதிப்பை பெற்றவர்களின் கொலை வழக்குகள் தொடர்பாக விசாரணை அமைப்புகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இழந்துவிடாதவாறு துரிதமாக செயல்பட வேண்டும் என சிபிஐயிடம் வலியுறுத்தியது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக்குழுவுக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட மூன்று பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை அவர்கள் மூன்று பேரும் கோலாப்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக சிறப்புப் புலனாய்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், மற்றும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், ஏற்கெனவே சிறப்புப் புலனாய்வுக் குழுவின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஷ், கல்புர்கி

தாமதமாகும் விசாரணைகள்

எனினும் படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஷ், கல்புர்கி போன்ற பகுத்தறிவாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.

படுகொலை செய்யப்பட்ட இன்னொரு பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், மருத்துவர் ஆவார். இவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான பெரிதும் அறியப்படுகின்றார்.

கவுரி லங்கேஷ் பிரபல இந்தியப் பெண் பத்திரிகையாளர். மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமாக பணியாற்றிய இவர் லங்கேஷ் பத்ரிகே என்ற கன்னட இதழின் முதன்மை ஆசிரியராகப் பணி புரிந்தார். 2017 செப்டம்பர் 5 ஆம் அன்று பெங்களூருவில் அடையாளம் தெரியாத சில நபர்கள் அவரைச் சுட்டுக் கொன்றனர்.

கல்புர்கி கன்னட எழுத்தாளர் ஆவார். இவர் சாகித்திய அகாதமியின் விருதைப் பெற்றவர். நிருபதுங்கா விருது, பம்பா விருது, கர்நாடக மாநில அரசின் சாகித்திய விருது ஆகியவற்றையும் பெற்றவர். பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராகப் பணியாற்றிய இவர் கடந்த 2015 ஆகஸ்ட் 30 அன்று அவரது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in