

பெங்களூரு,
நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரௌ தரையிறங்கச் செய்வது ஒரு பிறந்த குழந்தையை லாவகமாகக் கையில் ஏந்துவதுபோல் நுணுக்கமானது என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 விண்கலம், நாளை (சனிக்கிழமை) அதிகாலை 1:55 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது.
இது வெற்றிகரமாக நிறைவேறும்போது நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையை சந்திரயான் 2 நிகழ்த்தி இருக்கும்.
சந்திரயான் 2-விண்கலத்தின் லேண்டர் (விக்ரம்) நிலவின் மேற்பரப்பில் இறங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. இது சரியாக நாளை அதிகாலை 1.55 மணிக்கு நிகழும். அந்த கடைசி 15 நிமிடங்கள் மிக மிக முக்கியமானது என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், "உங்கள் கைகளில் திடீரென ஒரு பச்சிளம் குழந்தையை கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த குழந்தையை பத்திரமாக நீங்கள் பிடித்திருக்க தடுமாறுவீர்கள். குழந்தை அங்கும் இங்கும் நகரும்போது அதை கீழேவிட்டுவிடாமல் இருக்க மிகவும் மெனக்கிடுவீர்கள் அல்லவா? அதுபோலத்தான் சந்திரயான் 2-ல் இருக்கும் விக்ரம் லேண்டரும் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் தருணத்தில் அங்குமிங்கும் அலைபாயும்.
ஆனால், அதை உறுதியாக தரையிறக்க வேண்டும். இது நுணுக்கமானதுதான். அதனால்தான் சுற்றிலும் 4 இன்ஜின்களுடன், நடுவிலும் ஓர் இன்ஜினைப் பொருத்தியுள்ளோம்" என்று கூறினார்.
பிரதமர் பார்வையிடுகிறார்:
சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வைப் பிரதமர் மோடி இஸ்ரோ மையத்தில் இருந்தவாறு பார்வையிடுகிறார். அவருடன் இந்த நிகழ்வை காண்பதற்கு நாடு முழுவதும் இருந்து 60 பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது.
பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து படிப்படியாக விலகிய சந்திரயான் 2, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
கடந்த செப்டம்பர் 2-ல் பிரக்யான் ஆய்வூர்தியுடன் விக்ரம் லேண்டர் விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
இந்நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நாளை தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது.