ஜே.என்.யு. நிர்வாகத்துக்கு சுயவிவரக் குறிப்பை அனுப்ப ரொமிலா தாப்பர் மறுப்பு: பல்கலைக்கழகம் மீதும் விமர்சனம்

ரொமிலா தாப்பர்: கோப்புப்படம்
ரொமிலா தாப்பர்: கோப்புப்படம்
Updated on
2 min read

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தன் சுயவிவரக் குறிப்பை அனுப்ப, வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான ரொமிலா தாப்பர் மறுத்துள்ளார்.

75 வயதான பேராசிரியர்கள் தங்கள் தகைசால் பேராசிரியர் பொறுப்பைத் தொடர்கின்றனரா அல்லது இல்லையா என்பதைக் கேட்டு, அவர்கள் தங்கள் சுயவிவரங்களைச் சமர்ப்பிக்குமாறு டெல்லி ஜே.என்.யு. நிர்வாகம் உத்தரவிட்டது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, அப்பல்கலைக்கழக நிர்வாகம், தகைசால் பேராசிரியர்களால் மேற்கொண்டு பணியைத் தொடர முடியுமா என்பதை அறியவே சுயவிவரக் குறிப்பை கேட்பதாக விளக்கம் அளித்தது.

இந்தப் பட்டியலில் பல வரலாற்று நூல்களை எழுதியவரும், ஜே.என்.யு.வில் தகைசால் பேராசிரியராக பெரும் பங்களிப்புகளை மேற்கொண்ட புகழ்பெற்ற வரலாற்றாசிரியருமான ரொமிலா தாப்பரும் அடங்குவார்.

இந்நிலையில், ஜே.என்.யு. நிர்வாகத்துக்கு தன் சுயவிவரக் குறிப்பை அனுப்ப ரொமிலா தாப்பர் மறுத்துவிட்டார்.

இதுதொடர்பாக, அவர், 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், "ஜே.என்.யு. நிர்வாகத்துக்கு என் சுயவிவரக் குறிப்பை அனுப்ப நான் விரும்பவில்லை. எனக்கு நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில் முரண்கள் உள்ளன. தகைசால் பேராசியர் பொறுப்பு முதலில் வழங்கப்பட்டபோது, ​​இது வாழ்நாள் மரியாதை என்று கூறப்பட்டது. அந்த வார்த்தைகளிலிருந்து அவர்கள் பின்வாங்குகின்றனர். அவர்கள் விதிகளை மாற்றிவிட்டனர்.

ஜே.என்.யு. நிர்வாகத்துக்கு, தகைசால் பேராசிரியர் என்றால் என்ன என்பது குறித்து கடிதம் அனுப்பியிருக்கிறேன். ஏனென்றால், அதன் அர்த்தம் தெரிந்திருந்தால், எனது நிலையை மறு ஆய்வு செய்ய சுயவிவரக் குறிப்பை கேட்டிருக்க மாட்டார்கள். அந்தக் கடிதத்துக்கு, ஜே.என்.யு. இன்னும் பதில் அளிக்கவில்லை.

தகைசால் பேராசிரியர் பொறுப்பு, ஏற்கெனவே செய்துள்ள பணிகளின் அடிப்படையில் வழங்கப்படுவது. வருங்கால எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் எப்படி அமையும்?.

கடந்த காலப் பணிகளை மதிப்பீடு செய்வதற்காகவும், அதனடிப்படையில் அவர் தகைசால் பேராசிரியராகத் தொடர முடியுமா என்பதை பல்கலைக்கழக குழு முடிவெடுப்பதற்காகவும், சுயவிவரக் குறிப்பை கேட்பதாக பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பல்கலைக்கழகத்தின் விளக்கம், ஆதாரமற்றது'' என்று ரொமிலா தாப்பர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு என்ன நோக்கம் இருக்கும், இதனால் இந்தியாவில் கல்வியாளர்களுக்கு எத்தகைய வீழ்ச்சி இருக்கும் என்ற கேள்விக்கு, பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, உதவித்தொகை குறித்த உயர்வான நோக்கங்களை அழித்துவிடும் என ரொமிலா தாப்பர் கூறினார். இவை தற்செயலாக செய்யப்படுபவை அல்ல எனவும், வேண்டுமென்றே நிகழ்த்தப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

"பல்கலைக்கழகம் என்பது சுதந்திரமாக பேசக்கூடிய, ஆய்வு செய்யும், விவாதம் மேற்கொள்ளும் இடம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. நிர்வாக ஊழியர்களை விட, ஒரு பல்கலைக்கழகத்தின் கல்வி கூறு மிகவும் முக்கியமானது. ஒரு பல்கலைக்கழகத்தின் அறிவுசார் பணிகளைப் பாதுகாத்து வளர்ப்பது கல்வியாளர்கள்தான்", என ரொமிலா தாப்பர் கூறினார்.

ரொமிலா தாப்பர், அமெரிக்காவால் வழங்கப்படும் நோபல் என்ற சிறப்பைப் பெற்ற Kluge விருதைப் பெற்றிருக்கிறார். மேலும், உலகின் பல்வேறு சிறந்த பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றிருக்கும் அவர், பண்டைய இந்தியா குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஜே.என்.யு.வில் 20 ஆண்டுகளாகப் பேராசிரியராக இருக்கும் அவர், வரலாறு குறித்த ஆய்வுகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.1993-ல் இருந்து தகைசால் பேராசிரியராக இருக்கிறார். 87 வயதிலும், ஆய்வு, கற்பித்தல், எழுத்து, என பல பணிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஜே.என்.யு. நிர்வாகத்தின் நடவடிக்கை, சர்வதேசக் கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரொமிலா தாப்பரின் சுயவிவரக் குறிப்பு, ஜே.என்.யு.வின் இணையதளத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிசில்லா ஜெபராஜ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in