

சித்திப்பேட்டை
தெலங்கானா மாநில அரசு மானியத்தில் வழங்கும் யூரியாவைப் பெறுவதற்காக நேற்று (வியாழக்கிழமை) வரிசையில் நின்று காத்துக்கிடந்த விவசாயி திடீரென மாரடைப்பினால் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக 'முற்றிலும் திறமையற்ற நிர்வாகக் குளறுபடி' என்று விமர்சித்துள்ளது.
சித்திப்பேட்டை மாவட்டத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து காவல் ஆணையர் ஜோயல் டேவிஸ் கூறியதாவது:
''துபாகா வட்டாரப் பகுதியில் மானியத்தில் யூரியா விநியோகிக்கப்பட்டது. வேளாண்துறையினர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் குவிந்தனர். மிக நீண்ட வரிசை அமைக்கப்பட்டதால் வயதானவர்கள் உள்ளிட்ட விவசாயிகள் வெயிலில் காத்துக்கிடந்து யூரியா வாங்கிச் சென்றனர். தங்கள் நிலங்களுக்காக யூரியா வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தவர்களில் அச்சம்யபள்ளியைச் சேர்ந்த விவசாயி எல்லையாவும் (69) ஒருவர். இவர் மிகவும் உடல்நலம் குன்றியவராக காணப்பட்டார். தொடர்ந்து வரிசையில் நிற்கமுடியாத நிலையில் எல்லையா திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த விவசாயி எல்லையாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது''.
இவ்வாறு காவல் ஆணையர் தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கு தெலங்கானா மாநில பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெலங்கானா மாநிலத்தின் பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் கூறியதாவது:
''யூரியாவை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தபோது விவசாயி எல்லையா சோர்வடைந்து உயிரிழந்தது வருத்தமாக உள்ளது. சித்திப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் தொகுதியான துபாகாவிலேயே இத்தகைய சம்பவம் நடந்துள்ளது கண்டனத்திற்குரியது.
கே.சந்திரசேகர ராவ் அரசு மீண்டும் தெலங்கானா விவசாயிகளைக் கேவலமாக நடத்தியுள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) தலைமையிலான அரசாங்கத்தின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் திறமை இல்லாததால் அதுவே தெலங்கானா விவசாயிகளுக்கு ஒரு சாபமாக மாறியுள்ளது.
யூரியா விநியோகத்திற்கான தளவாடங்களைத் திட்டமிடுவதில் மட்டுமல்ல விவசாயிகளை யூரியா வாங்க மிக நீண்ட வரிசைகளில் வெயிலில் காக்க வைத்ததன் மூலம் மாநில வேளாண் அமைச்சகம் தோல்வியடைந்துள்ளது. மிகவும் குறுகிய காலகட்டத்தில் யூரியா விநியோகம் என்பது வேளாண் துறையின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது''.
இவ்வாறு தெலங்கானா பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.