Published : 06 Sep 2019 10:44 AM
Last Updated : 06 Sep 2019 10:44 AM

‘புகைப்படம் எடுக்க சோபா வேண்டாம்; சேர் போதும்’ - ரஷ்யாவில் பிரதமர் மோடி; வைரலாகும் வீடியோ காட்சி

விளாதிவோஸ்டக்
ரஷ்யாவில் இந்திய அதிகாரிகள் குழுவினருடன் குழு புகைப்படம் எடுத்தபோது தனக்காக பிரத்யேகமாக சோபா போட்டதை வேண்டாம் எனக் கூறி பிரதமர் மோடி நிராகரித்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றார்.
மாநாட்டின் இடையே, ரஷ்யா - இந்தியா இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் வழித்தொடர்பு, எரிசக்தி, இயற்கை எரிவாயு, பெட்ரோல், தகவல் தொடர்பு, கலாச்சாரம் உள்ளிட்ட 15 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பின்னர் நேற்று பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே, மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது உள்ளிட்டோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், ரஷ்யாவின் தூரக்கிழக்கு வளர்ச்சிக்காக 100 கோடி டாலர்கள் கடனுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

பின்னர் அவர் ரஷ்யாவில் இருந்து டெல்லி புறப்பட்டார். பிரதமர் தலைமையிலான குழுவில் ஏராளமான அதிகாரிகளும் உடன் ரஷ்யா சென்றனர். மாநட்டை முடித்துக் கொண்டு அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது பிரதமர் மோடியுடன் சேர்ந்து இந்தியாவில் இருந்து வந்த வர்த்தகம் மற்றும் அரசு அதிகாரிகள் தரப்பிலான குழுவினர் புகைப்படம் எடுக்க விருப்பம் தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடி அமர்வதற்காக சோபாவும், அதனை சுற்றி அதிகாரிகள் அமருவதற்காக சேரும் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த பிரதமர் மோடி தனக்கு மட்டும் சோபா வைத்திருந்ததை பார்த்து அதனை அகற்றுமாறு கூறினார்.

மற்ற அதிகாரிகள் அமரும் சேரிலேயே தாமும் அமர்ந்து குழுவாக போட்டோ எடுத்துக் கொண்டார். ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பியுள்ள நிலையில் தற்போது இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி எளிமையானவர் எனக் கூறி நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதுபோலவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியின் செயலை பாராட்டி தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x