

இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராம்நகர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த செவ்வாய்கிழமை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 13-ம் தேதி வரை அமலாக்கத் துறையின் காவலுக்கு செல்லு மாறு நீதிபதிகள் உத்தரவிட்ட னர்.
இந்நிலையில் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கர்நாடகம் முழுவதும் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டியா, ராம்நகர், தும்கூரு உள்ளிட்ட மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். ராம்நகர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடைபெற்றதால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கர்நாடகா முழுவதும் நேற்று இயல்பு நிலை திரும்பினாலும், ராம்நகர் மாவட்டத்தில் மட்டும் 2-வது நாளாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. டி.கே.சிவகுமாரின் சொந்த தொகுதியான கனகபுரா, அவரது சகோதரர் டி.கே.சுரேஷின் தொகுதியான பெங்களூரு ஊரகம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் 2-ம் நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ராம்நகர் அருகே காங்கிரஸார் பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே சாலைகளில் டயர்களையும், மரக்கட்டைகளையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
போராட்டத்தின் போது காங்கிரஸார் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் அவர்களின் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.