

ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
பெண் குழந்தைகளும் இனி ராணுவப் பள்ளிகளில் இணைந்து பயில வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன் என்பவரால் நாடு முழுவதிலும் துவக்கப்பட்டது ‘சைனிக் ஸ்கூல்’ என்றழைக்கப் படும் ராணுவப் பள்ளிகள்.
இவை 1961-ஆம் ஆண்டு முதல், மாணவர்கள் இடையே சிறந்த திறனை வளர்த்து அவர்களை ராணுவத்தில் சேர்க்கும் வகையில் கல்வி அளித்து வருகின்றன.
பாதுகாப்புத்துறை அமைச்சகத் தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இப் பள்ளிகளில் சிபிஎஸ்இ முறை கல்வி போதிக்கப்படுகிறது. தங்கி பயிலும் வசதி கொண்ட இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. மாணவி கள் சேர்க்கப்படுவதில்லை.
மன உறுதி மற்றும் உடற்பயிற்சி களுடன் சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ராணுவத் தில் அதிகாரிகளாக சேர்ந்து பணி யாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.
இந்திய ராணுவத்தில் தற்போது ஆண்களுக்கு இணையான பதவி களில் பெண் அதிகாரிகளும் பணி யாற்றி வருகின்றனர்.
இந்த சூழலில், மாணவிகள் மட்டும் சைனிக் பள்ளிகளில் அனு மதிக்கப்படாதது பல ஆண்டுகளாக அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.
இதனைக் கருத்தில்கொண்டு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச் சகம், சோதனை அடிப்படையில் வடகிழக்குப் பகுதியின் மிசோராம், உ.பி.யின் லக்னோ, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் ஐந்து சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளை கடந்த 2018-ஆம் ஆண்டு சேர்த்தது.
6 மற்றும் 9 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தைகள் எந்த பிரச்சினைகளும் இன்றி தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், நாட்டின் 28 சைனிக் பள்ளிகளிலும் ப்ளஸ் டூ வகுப்பு வரை இனி பெண் குழந்தைகள் பயில அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும் போது, ‘அனைத்து சைனிக் பள்ளி களிலும் 2020-ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தைகள் இணைந்து பயிலும் வகையில் அதன் விதிமுறை களில் மாற்றம் கொண்டு வரப்பட வுள்ளது’ எனத் தெரிவித்தனர்.
சைனிக் பள்ளிகளின் விதிமுறை மாற்றத்திற்கு பின், மத்திய பாது காப்புத்துறை சார்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை யும் அனுப்பப்பட உள்ளது.
மாணவிகளின் வசதிக்கேற்ற வாறு தங்கும் விடுதி, பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன. இதுவரை, அதில் மாணவர்கள் மட்டுமே பயில்வதால் ஆண் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தன. இதில் மாற்றம் செய்யப்பட்டு பெண் ஆசிரியைகளும் அதிக அளவில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
வரும் 2020-21 கல்வியாண்டில் சைனிக் பள்ளியில் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் செப்டம்பர் 22 ஆகும். தற்போது மாணவிகளும் சேர்க்கப்பட உள்ள தால் அதற்கான அறிவிப்பு விரை வில் வெளியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது.