

சென்னை
இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் 48 நாள் பய ணத்துக்குப் பிறகு, நிலவை நெருங்கியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திர யானின் லேண்டர் கலம் நாளை (செப்டம்பர் 7) அதிகாலை தரையிறங்க உள்ளது. நிலவில் சந்திரயான் இறங்கும் காட்சியை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் காண உள்ளார்.
நிலவை ஆராய்வதற்காக இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான் விண்கலம் பின்னர் இதில் இருந்து விலகி, தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது.
சந்திரயான்-2 விண்கலம் மொத்தம் 3,850 கிலோ எடை கொண்டது. இதில், தொடர்ந்து நிலவை சுற்றிவரக்கூடிய ‘ஆர்பிட்டர்’, நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ‘விக்ரம்’ என்ற லேண்டர் கலம், நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் என 3 அதிநவீன சாதனங்கள் உள்ளன.
இதற்கிடையே, சந்திரயான் விண்கலத் தின் ஆர்பிட்டர் பகுதியில் இருந்து ‘விக்ரம்’ என்ற லேண்டர் பாகம் கடந்த 2-ம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
இதன் பிறகு, குறைந்தபட்சம் 96 கி.மீ., அதிகபட்சம் 125 கி.மீ. தொலைவு கொண்ட சுற்றுப்பாதையில் ஆர்பிட்டர் கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சில சுற்றுப்பாதை மாற்றங்களுக்கு பின்னர் நிலவில் தரையிறங்க உள்ள லேண்டர் தற்போது நிலவின் தரைப்பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 35 கி.மீ., அதிகபட்சம் 101 கி.மீ. தொலைவு கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றிவருகிறது.
48 நாட்கள் பயணம்
இந்நிலையில், 48 நாட்கள் பயணத் துக்குப் பிறகு, சந்திரயானின் லேண்டர் பகுதி நாளை (செப்டம்பர் 7) அதிகாலை நிலவில் மெதுவாக தரையிறங்க உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
லேண்டரின் வேகத்தை படிப்படியாக குறைத்து பூஜ்ய நிலைக்கு கொண்டு வருவதுதான் இத்திட்டத்தின் சவாலான பணியாகும். அதை வெற்றிகரமாக முடித்து விட்டால் விண்கலம் தரையிறங்குவது எளிதாகிவிடும்.
ஏற்கெனவே, லேண்டரின் வேகத்தை கட்டுப்படுத்த பல்வேறு சோதனை முயற்சிகளை விஞ்ஞானிகள் மேற் கொண்டுள்ளனர். அதன்படி நிலவுக்கு அருகே லேண்டர் வந்ததும் எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி அதன் வேகம் குறைக்கப்படும்.
தரையில் இருந்து 10 மீட்டர் உயரத் துக்கு லேண்டர் வந்ததும், அதன் வேகம் ஒரு நிமிடத்துக்கு 2 மீட்டர் என்ற அளவில் இருக்கும். இறுதியாக லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நாளை அதிகாலை 1.40 மணிக்கு அதை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் தொடங்கும்.
முதலில் எங்கு தரையிறங்குவது என்பதை லேண்டரில் உள்ள சென் சார்கள் ஆராய்ந்து, சமதள பரப்பு உடைய இடத்தை தேர்வு செய்யும். பிறகு, அதி காலை 1.55 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் ‘மான்சினஸ்-சி’ - ‘சிம்பீலியஸ்-என்’ என்ற இரு பள்ளங்களுக்கு இடையே லேண்டர் மிக மெதுவாக தரையிறங்கும். லேண்டர் தரையிறங்கிய 3 மணி நேரத் துக்கு பின்னர் அதில் வைக்கப்பட்டுள்ள ‘பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் வெளியே வந்து ஆய்வு செய்யும்.
ஆர்பிட்டர் பகுதி அடுத்த ஓராண்டு காலத்துக்கு நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்யும். லேண்டர் தரையிறங்கிய இடத்திலேயே இருந்தபடியும், ரோவர் வாகனம் நிலவின் மேற்பரப்பிலும் 14 நாட் கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.
14 வகை கருவிகள்
இதற்காக ஆர்பிட்டரில் 8, லேண்டரில் 4, ரோவரில் 2 என மொத்தம் 14 வகை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நிலவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் 15 நிமிட இடைவெளியில் பூமிக்கு கிடைக்குமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு மற்றும் தென் துருவத்தில் தரை யிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.
இதற்கிடையே, நிலவில் சந்திரயான் இறங்கும் காட்சியை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் காண உள்ளார். அவருடன் இணைந்து பள்ளி மாணவர்கள் 70 பேரும் விண்கலம் தரையிறங்குவதை நேரலையாக காண்கின்றனர். இஸ்ரோ சார்பில் கடந்த மாதம் நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.