

ரஜோரி,
காஷ்மீரின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று காலை ரஜோரியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் கலந்துகொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இவ்விழாவில் ஆர்மி குட்வில் பப்ளிக் ஸ்கூல் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வீதி நாடகங்களை நடத்தினர். அதன்மூலம் அமைதி, நல்லிணக்கம் போன்ற செய்திகளை பரப்பினர்.
மேலும் பல்வேறு பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவ மாணவிகள் பெண்களுக்கான கல்வியை வலியுறுத்தியும் நாட்டின் அமைதிக்கு ஒற்றுமை தேவை போன்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை ஏந்தியும் வந்திருந்தனர்.
பலரையும் கவர்ந்த வீதி நாடகத்தில் நடிப்பவர்களில் ஒரு மாணவர், பார்வையாளரைப் பார்த்து ''உனக்கு அம்மா தேவை, சகோதரி தேவை மற்றும் மனைவி தேவை ஆனால் ஏன் பெண் குழந்தை மட்டும் வேண்டாம் என்கிறாய்?'' என்று கேட்கிறார்.
அதேபோல இன்னொரு மாணவரும் பார்வையாளரைப் பார்த்து ''தண்ணீர் மற்றும் உணவுக்கு எந்த மதமும் இல்லை. மனித நேயத்திற்கும் சாதி இல்லை. அப்படியெனில் நாம் ஏன் பிரிந்துகிடக்கிறோம்'' என்ற கேள்வியை எழுப்புகிறார்.
நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்து, மாணவர்கள் பார்வையாளர்களின் மனதில் ஒரு அச்சை வைத்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் மாணவர்கள் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி வீதி நாடகம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.