

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை நக்சல்களால் கடத்தப்பட்ட 4 போலீஸாரின் சடலங்கள் பீஜப்பூர் மாவட்டத்தின் வனப் பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்டன.
குத்மா கிராமம் அருகே நேற்று முன்தினம் இரவு மக்கள் மன்றத் தில் (ஜன் அதாலத்) விசாரணை நடத்திய பிறகு 4 போலீஸாரையும் நக்சல்கள் கொன்றுவிட்டனர் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பீஜப்பூர் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் இந்திரா கல்யாண் எலசலா கூறியதாவது:
கடந்த 13-ம் தேதி பீஜப்பூரி லிருந்து குத்ரு வழியாக செல்லும் பஸ்கள், வாகனங்களை நக்சல்கள் சோதனையிட்டுள்ளனர். அப்போது, பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்ற 6 போலீஸாரை அவர்கள் கடத்தி உள்ளனர். அவர்களில் 2 பேர் தப்பி வந்தனர்.
இந்நிலையில், குத்ரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்மா கிராமத்துக்கு அருகே அடர்ந்த வனப்பகுதியில் 4 பேரின் சடலங்களும் கண்டெடுக் கப்பட்டது. கொல்லப்பட்டவர்கள் ஜெய்தேவ் யாதவ், மங்கள் சோதி, ராஜு தெலா, ரமா மஜ்ஜி ஆகிய 4 உதவி காவலர்கள் என தெரியவந்துள்ளது.
கூர்மையான ஆயுதங்களால் அவர்கள் கொல்லப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பீஜப்பூரில் உள்ள குத்ரு பகுதி நக்சல் நடமாட்டம் மிக்க பகுதியாக கருதப்படுகிறது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, கெடுல்நர் கிராமத்தில் ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அலுவலர்கள் மீது நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோழைத்தனமான செயல்
டெல்லி சென்றிருந்த சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று கூறியதாவது:
ஆயுதம் எதுவும் இன்றி பஸ்ஸில் சென்ற 4 போலீஸாரை நக்சல்கள் கடத்திச் சென்று கொலை செய்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கோழைத்தனமான இந்தச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிரிழந்த போலீஸாரின் குடும்பத்தினருக்கு இந்த சமூகம் ஆதரவாக இருக்கும்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கண்டு விரக்தி அடைந்த நக்சல்கள் இத்தகைய கோழைத்தனமான செயலில் ஈடுபடுகிறார்கள்.
இதன்மூலம் அவர்களின் உண்மை முகம் வெளியாகி விட்டது. நக்சல்களும் நக்சலிசமும் மாநிலத்திலிருந்து விரைவில் முழுமையாக அகற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதல்வர் உத்தரவு
மேலும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்யும்படி மாநில வனத்துறை அமைச்சர் மகேஷ் காக்ரா, மாநில காவல் துறை இயக்குநர் ஏ.என்.உபாத்யாயா ஆகியோருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சடலங்களுக்கு அருகே இருந்த துண்டு சீட்டில், “அப்பாவியான பழங்குடியின மக்களை துன்புறுத்துவதுடன், பொய் வழக்கு போட்டு கைது செய்வதாலேயே இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளோம்” என கூறப்பட்டுள்ளது. மேலும், போலீஸாரையோ, பாதுகாப்புப் படையினரையோ பஸ்களில் ஏற்ற கூடாது என்றும் அதன் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.