Published : 05 Sep 2019 05:56 PM
Last Updated : 05 Sep 2019 05:56 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: திஹார் சிறைக்கு செல்கிறார் சிதம்பரம்: 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புது டெல்லி,
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் (வரும் 19-ம் தேதிவரை) நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 15 நாட்களாக சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது.

செப்டம்பர் 5-ம் தேதிவரை ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகரும் சிபிஐ காவலை 5-ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டார். சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த சிபிஐ காவல் இன்றோடு முடிந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மனுவை ப.சிதம்பரம் தரப்பு நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற்றபின், அவரை நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தினார்கள்.

ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார், ப.சிதம்பரம் தரப்பில் கபில் சிபல் ஆஜராகினார். துஷார் மேத்தா வாதிடுகையில், " அமலாக்கப்பிரிவு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இவர் சிபிஐ வழக்கில் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

சிதம்பரத்தை சுதந்திரமாக நடமாடவிடக்கூடாது, சக்திவாய்ந்த மனிதர் என்பதால், ஆதாரங்களை அழித்துவிடுவார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க வேண்டும் அமலாக்கப்பிரிவு வழக்கில் அளிக்கப்பட்ட ஆவணங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆதாரங்களை அழிக்க அதிகமான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது " எனத் தெரிவித்தார்.

இதற்கு சிதம்பரம் தரப்பில் கபில் சிபில் வாதிடுகையில், " எந்தவிதமான குற்றச்சாட்டும் பசிதம்பரம் மீது இல்லை என்று சிபிஐ கூறுகிறது, ஆனால் ஆதாரங்களை அழித்துவிடுவார் என்றும் விசாரணையை குலைத்துவிடுவார் என்றும் கூறுகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு செல்லத் சிதம்பரம் தயாராக இருக்கிறார். அவரை அமலாக்கப் பிரிவு காவலுக்கு அனுப்ப வேண்டும். எதற்காக சிதம்பரத்தை சிறைக்கு அனுப்ப வேண்டும், அமலாக்கப்பிரிவு காவலில் எடுக்கட்டும்" என வாதிட்டார்.

சிதம்பரத்துக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை, குற்றப்பத்திரிகை இல்லை. ஆனால், சக்திவாய்ந்தவர், சாட்சிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறுகிறார்கள். ஆனால் ஆதாரங்கள் இல்லை.
நீதிமன்ற காவலுக்கு செல்லாமல் தவிர்ப்பதற்கான காரணங்களை நாங்கள் அளித்துள்ளோம். ப.சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி அஜெய் குமார் குகர் பிறப்பித்த உத்தரவில் " ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடுகிறேன். அவருக்குத் தேவையான மருந்துகள் சிறையில் கிடைக்க வழி செய்யப்படும்" என உத்தரிவிட்டார்.

அப்போது கபில் சிபல் வாதிடுகையில் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தவர் ப.சிதம்பரம் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஆதலால், அவருக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் " சிறையில் ப.சிதம்பரத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்" என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தை தனிச்சிறையில் அடைக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x