

பண்டா (உ.பி)
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொள்ள வந்த இந்துக்களுக்கு அசைவ பிரியாணி பரிமாறியதாக 43 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 31 அன்று மஹோபா மாவட்டத்தில் சர்காரி பகுதியில் சலாட் கிராமத்தில் ஷேக் பீர் பாபாவின் உர்ஸ் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. சூஃபியிஸ கவிஞரின் நினைவாக நடத்தப்படும் இத்திருவிழாவில் இந்துக்கள், முஸ்லிகள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரும் திரளாகக் கலந்துகொள்வது வழக்கம்.
அப்போது விழாவில் கலந்துகொண்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வழங்கப்படுவதுபோல இந்துக்களுக்கும் அசைவ பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. அதில் மாட்டுக்கறி இருப்பதாகக் கூறி சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
பின்னர் அசைவ பிரியாணியை இந்துக்களுக்கு வழங்குவது நிறுத்தப்பட்டது. எனினும் இப்பிரச்சினையை செவ்வாய்க்கிழமை அப்பகுதிக்கு வந்த பாஜக எம்எல்ஏ பிரிஜ்பூஷண் ராஜ்பூத்திடம் உள்ளூர் கிராமவாசிகள் சிலர் தெரிவித்தனர். பாஜக எம்எல்ஏ தலையீட்டிற்கு பின்னர் புதன் அன்று திருவிழா தொடர்புடைய 43 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது .
"இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டுமென்றே பிரியாணி வழங்கப்பட்டது. இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை தேவை" என்று ராஜ்பூத் செய்தியாளர்களிடம் கூறினார்.
காவல்துறை கண்காணிப்பாளர் சுவாமி நாத் கூறுகையில், உர்ஸ் திருவிழாவில் அசைவ உணவு பரிமாறுவது வழக்கமான ஒன்றுதான். இந்துக்களுக்கு வேண்டுமென்றே அசைவ பிரியாணி வழங்கப்பட்டது என்பது உண்மையல்ல. இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை" என்று அவர் கூறினார்.