புதிய மோட்டார் வாகனச் சட்டம்: 10 விதிமுறை மீறலில் ஈடுபட்ட டிராக்டர் ஓட்டுநருக்கு ரூ.59 ஆயிரம் அபராதம்

குருகிராமில் அபராதம் விதிக்கப்பட்ட டிராக்டர் :  படம் ஏஎன்ஐ
குருகிராமில் அபராதம் விதிக்கப்பட்ட டிராக்டர் : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

குருகிராம்,


மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விதிமுறை மீறலில் ஈடுபட்ட டிராக்டர் ஓட்டுநருக்கு ரூ.59 ஆயிரம் அபராதத்தை போக்குவரத்து போலீஸார் விதித்துள்ளனர்.

டெல்லி அருகே ஹரியாணா மாநிலத்துக்குப்டபட்ட குருகிராம் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழப்பைத் தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்தும் வகையிலும் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அந்த புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை இயக்குவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஹரியாணா மாநிலம், குருகிராமைச் சேர்ந்த ராம் கோபால் என்பவர் நேற்று டிராக்டர் ஓட்டிவந்தார். குருகிராம் நியூ காலணி பகுதியில் ராம்கோபால் வந்தபோது போக்குவரத்து சிக்னலை மீறி டிராக்டரை ஓட்டிச் சென்றுவிட்டார். இதையடுத்து ராம்கோபாலைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

டிராக்டருக்கான ஆவணங்களை போக்குவரத்து போலீஸார் ராம் கோபாலிடம் கேட்டபோது அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, ஆர்.சி.புக் இல்லாமல் ஓட்டியது, வாகனத்துக்கான தகுதிச் சான்று இல்லாமல் இருப்பது, மூன்றாவது நபர் காப்பீடு இல்லை, மாசுக் கட்டுப்பாடு சான்று இல்லை, ஆபத்தான பொருட்களை பாரம் ஏற்றி வந்தது, போக்குவரத்து போலீஸாரின் விதிமுறைகளை மீறி நடத்தல், போக்குவரத்து விதிகளை மீறி நடத்தல், போக்குவரத்து சிக்னலை மீறி நடத்தல் ஆகிய 10 பிரிவுகளில் விதிமுறை மீறல் செய்ததாக அவருக்கு ரூ.59 ஆயிரம் அபராதம் விதித்தனர்

இதுகுறித்து போக்குவரத்து போலீஸின் மக்கள் தொடர்பு அதிகாரி சுபாஷ் போகன் கூறுகையில், " டிராக்டர் ஓட்டுநரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை, வாகனப்பதிவு சான்று இல்லை, எப்சி இல்லை, மூன்றாவது நபர் காப்பீடு இல்லை, மாசுக்கட்டுப்பாடு சான்று இல்லை உள்ளிட்ட 10 வகையான விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவருக்கு ரூ.59 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.

குருகிராம் போலீஸார் 3-வது முறையாக இதுபோன்ற பெரிய தொகையை அபராதமாக விதிக்கின்றனர். இதற்கு முன் மொபட் வைத்திருந்த ஒருவருக்கு ரூ.23 ஆயிரமும், ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.32 ஆயிரமும் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in