

புதுடெல்லி,
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி இன்று உத்தரவிட்டார்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குக் கட்டணி ஆட்சியில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு முதலீடு கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக, சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறையும் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவை, டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த முன்ஜாமீன் மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடந்தது. அப்போது, " இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க சிபிஐயும், அமலாக்கத் துறையும் மீண்டும் மீண்டும் கோருவது இக்கட்டான சூழலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஓராண்டாக இதே நடைமுறையை சிபிஐயும், அமலாக்கத் துறையும் கடைப்பிடித்து வருகின்றன. மனுதாரர்களின் முன்ஜாமீன் குறித்து உத்தரவு செப்டம்பர் 5-ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்பின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி சைனி முன் இன்று ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் " ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று வழக்கு மாலை எடுக்கப்படுகிறது. அதுவரை உத்தரவு ஏதும் பிறப்பிக்க வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால், சிபிஐ, அமலாக்கப்பிரிவு கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஓ.பி. சைனி, நண்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி 2 மணிக்கு விசாரணை தொடங்கியதும், நீதிபதி ஓ.பி. சைனி தனது உத்தரவுகளை வாசித்தார்.
" ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் முன் வழங்கப்படுகிறது. இருவரும் வெளிநாடு செல்வதற்கு முன் நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில், சாட்சிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. விசாரணை அமைப்புகளுக்கு இருவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இரு விசாரணை அமைப்புகளும் வாதிடுவதைத் தவிர்த்து, வழக்கு பதிவு செய்ததில் இருந்து விசாரணை நடத்தாமல், தேதி கேட்டுத் தாமதித்துக்கொண்டே வந்தீர்கள். இந்த வழக்கில் இரு விசாரணை அமைப்புகளும் தொடக்கத்தில் இருந்தே மிகுந்த தாமதம் செய்தார்கள்.
இப்போது சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவரும் எந்தவிதமான அரசுப் பதவியிலும் இல்லை என்பதால், இதேபோன்ற குற்றத்தை இனி செய்வதற்கு எந்த சாத்தியமும் இல்லை.
இந்த வழக்கில் தொடர்புடைய தயாநிதி மாறன் மற்றவர்கள் ரூ.749 கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தயாநிதிமாறன் கைது செய்யப்படவில்லை. ஆனால், ரூ.749 கோடியோடு ஒப்பிடும்போது, குற்றம்சாட்டப்பட்ட சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஊழல் செய்ததாக குறிப்பிடும் ரூ.1.13 கோடி என்பது அற்பமான தொகை.
ஓரே மாதிரியான குற்றம் செய்ததாகக் கூறப்படும் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு இடையே விசாரணை அமைப்புகள் வேறுபாடு காட்டி நடத்தக்கூடாது. இது சட்டத்துக்கு விரோதமானதாகும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருக்கும் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள சொந்த ஜாமீனும், பிறநபர் ஜாமீனாகவும் வழங்க வேண்டும்."
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
பிடிஐ