

ஸ்ரீநகர்,
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் படை குவிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சர்ச்சை இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்னும் புகைந்து கொண்டே இருக்கும் சூழலில் பாக் செக்டார், கோட்லி செக்டார் பகுதிகளை ஒட்டிய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் படை குவிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு பிரிகேட் என்று சொல்லக்கூடிய அளவில் 2000-க்கும் அதிகமான வீரர்களை பாகிஸ்தான் இப்பகுதிகளில் குவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய ராணுவ தரப்பில், எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்தப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் இன்னும் தாக்குதலுக்கு ஏற்ற வகையில் நிறுத்தப்படவில்லை. எனினும் இந்த படை குவிப்பை இந்தியத் தரப்பு உற்று நோக்கி வருகிறது.
எல்லையில் படைகளைக் குவிப்பதன் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதே பாகிஸ்தானின் நோக்கம். இதன் மூலம் காஷ்மீரில் பதற்றம் நிலவுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி சர்வதேச தலையீட்டை பாகிஸ்தான் பெற விரும்புகிறது.
எல்லையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் குவிப்பு நடைபெறும் வேளையில் இன்னொருபுறம் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கங்கள் ஆப்கன் மற்றும் பாக்., உள்ளூர்வாசிகளை மூளைசலவை செய்து பெருமளவில் தனது படையைப் பெருக்கி வரும் தகவலும் எங்களுக்குக் கிடைத்துள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏஎன்ஐ