Published : 05 Sep 2019 01:15 PM
Last Updated : 05 Sep 2019 01:15 PM

பெட்ரோல், டீசல் கார்கள் உற்பத்தியைத் தடை செய்யும் எண்ணமில்லை: நிதின் கட்கரி விளக்கம்

புதுடெல்லி,

ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டிருப்பது உண்மையே. ஆனாலும் சவால்களை வாய்ப்புகளாக மாற்ற இயலும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆட்டோமொபைல் தொழில்துறை சுணக்கம் தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தியப் பொருளாதார மந்தநிலைக்கு ஆட்டோமொபைல் துறை உள்ளிட்ட சில துறைகள் நலிவடைந்திருப்பதை எதிர்க்கட்சிகள் சாட்சியாக சுட்டிக் காட்டி வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் சியாம் (சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுஃபேக்சரர்ஸ்) இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் 59-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட நிதின் கட்கரி ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டிருப்பது உண்மையே. ஆனாலும் சவால்களை வாய்ப்புகளாக மாற்ற இயலும் என்று கூறினார்.

அவர் பேசியதாவது:

''தற்போதைய பொருளாதார புள்ளிவிவரங்கள் அடிப்படையில் ஆட்டோமொபைல் துறையில் சில சிக்கல்கள் இருப்பது உண்மையே. சர்வதேசப் பொருளாதார மந்தநிலை, டிமாண்ட் - சப்ளை பிரச்சினைகளால் இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் இதனை உற்று கவனித்து தீர்வுகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த மந்தநிலையால் வேலைவாய்ப்பிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சியிலும் இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதில் அரசாங்கத்தின் உடனடித் தலையீடு அவசியம். என்னதான் இன்று தேக்கநிலை இருந்தாலும் ஆட்டோமொபைல் துறையின் சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றலாம். அதற்காக, இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசவுள்ளேன். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைக்க வலியுறுத்துவேன்.

பெட்ரோல், டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. அதில் உண்மையில்லை. ரூ.4.50 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் ஆட்டோமொபைல் துறை நாட்டில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை அரசு அங்கீகரிக்கிறது. அரசாங்கத்துக்கும் சில சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் கச்சா எண்ணெய் இறக்குமதி விலை, இரண்டாவதாக சுற்றுச்சூழல் மாசு, மூன்றாவதாக சாலை பாதுகாப்பு.

சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த ஆட்டோமொபைல் துறை கேடு விளைவிக்காத எரிசக்தியை நோக்கி நகர வேண்டும் என்றே அரசு வலியுறுத்துகிறது. தவிர சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக டீசல், பெட்ரோல் வாகனங்களை முற்றிலும் ஒழிக்கப்போகிறது என்று அர்த்தமில்லை.

ஏனெனில், சுற்றுச்சூழல் மாசுக்கு முழுக்க முழுக்க வாகனங்களை மட்டுமே குறை கூற முடியாது. டெல்லி மாசு விவகாரத்தில் வாகனப் புகை முக்கியப் பங்கு வகிக்கிறது.

வாகனப் புகையால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்த அரசு ரூ.50,000 கோடி செலவில் திட்டத்தை வகுத்துள்ளது. அதன் விளைவாக டெல்லியில் 29% மாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாசைக் கட்டுப்படுத்துவது என்பது தேசிய அக்கறை.

இப்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதல்களுடன் விரைவில் தீர்வு எட்டப்படும்''.

இவ்வாறு நிதின் கட்கரி பேசியுள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுஸுகி நிறுவனம் ஹரியாணா மாநிலத்தில் உள்ள குருகிராம், மனேசர் தொழிற்சாலையில் கார் உற்பத்தியை 2 நாட்களுக்கு நிறுத்த முடிவு செய்துள்ளது. இதுபோன்று பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தற்காலிக உற்பத்தி நிறுத்த நடவடிக்கைகளில் உள்ளன.

இந்நிலையில், நிதின் கட்கரி ஆட்டோமொபைல் துறையை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க அளித்துள்ள வாக்குறதி உற்பத்தியாளர்களுக்கு சிறு ஆறுதலாக அமையும்.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x