

பெங்களூரு
மாறிவரும் இணைய உலகில், ஆன்லைன் வர்த்தகம் இன்றியமையாததாக மாறிவிட்டது. தலைக்கு ஷாம்பு முதல் காலுக்கு செருப்பு வரை அனைத்துமே ஆன்லைனில் கிடைக்கின்றன. உணவும் இதில் விதிவிலக்கில்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்து ஆர்டர் செய்தால், வீடு தேடி பொருட்கள் வருவது இன்றைய தலைமுறையை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இதனால் ஆன்லைன் சந்தை இந்தியாவில் வேகமாக வளர்ந்துவருகிறது.
பிரபல உணவகங்கள், தங்களின் உணவுகளை ஆன்லைனில் விற்பனை செய்தாலும், அனைத்து உணவகங்களின் உணவுகளையும் ஆன்லைனில் விற்பனை செய்யும் ஸ்விக்கி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் மற்றும் ஃபுட்பாண்டா ஆகிய விற்பனை நிறுவனங்கள் அபார வளர்ச்சியடைந்துள்ளன.
இந்நிலையில் ஆன்லைன் உண்வு விற்பனையில் முன்னணி நிறுவனமான ‘ஸ்விக்கி’ பெங்களூருவில் ‘ஸ்விக்கி கோ’ என்ற சேவையை நேற்று (04.09.19) தொடங்கியது. இந்த சேவை மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் டெலிவரி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாற்றமடைந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இந்தப் புதிய சேவை இருக்கும். சிறு தொழில் செய்பவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு இது பயனுள்ளதாகவும் இருக்கும். வீட்டில் மறந்து வைக்கப்பட்ட சாவி, லாண்டரியில் விடப்பட்ட துணிகள், டிபன் பாக்ஸ் உள்ளட்ட அனைத்தையும் ’ஸ்விக்கி கோ’ மூலம் டெலிவரி செய்யமுடியும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவைத் தொடர்ந்து வரும் 2020-ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள 300 நகரங்களில் இந்தச் சேவையை விரிவுபடுத்த ஸ்விக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.