

அகமதாபாத்,
டிக் டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஜீப் ஒன்று தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சி வைரலானதை அடுத்து ஜீப் உரிமையாளரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.
வீடியோவில், தங்க நகைகளை அணிந்த ஒரு நபர் தனது சொந்த ஜீப்பின் மீது பெட்ரோலை ஊற்றுகிறார். பின்னர் எரியும் தீக்குச்சியை வாகனத்தின் மீது எறிகிறார். சாலையில் நின்றுகொண்டிருந்த வாகனம் நன்றாக தீப்பிடித்து திகுதிகுவென எரிகிறது. இந்தக் காட்சிக்குப் பின்னணியாக ஒரு பஞ்சாபி பாடல் ஒலிக்கிறது. டிக் டாக்கில் ஒளிபரப்பான இந்த வீடியோ சிறிது நேரத்தில் சமூக வலைதளமெங்கும் வைரலானது. இதைப் பார்க்கும் பலருக்கும் இதை வேண்டுமென்றே டிக் டாக் பரபரப்புக்காகச் செய்ததாகவே தோன்றும். ஆனால் நடந்த கதையே வேறு.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் வி.கே.காத்வி கூறியதாவது:
''செப்டம்பர் 2-ம் தேதி ராஜ்கோட்டில் உள்ள கோத்தாரியா சாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் இந்திரஜித்சிங் ஜடேஜா (33) என்பவர் தனக்குச் சொந்தமான ஒரு ஜீப்பை தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் அறிந்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் செப்டம்பர் 3 ஆம் தேதி பக்திநகர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த விபரீதச் செயலுக்காக ஜடேஜா மீதும் அவருடைய இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் நிமேஷ் கோஹல் (28) ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 285-ன் கீழ் (தீ சம்பந்தமாக அலட்சியமாக நடந்து கொள்ளுதல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டது,
சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஜீப் திடீரென நின்று விட்டதாகவும் எவ்வளவுமுறை முயற்சிசெய்து பார்த்தபிறகும், திரும்பவும் வாகனத்தை இயக்க முடியவில்லை என்ற விரக்தியின் காரணமாகவே வாகனத்தை தீ வைத்துக் கொளுத்த முடிவு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ பதிவு தான் செய்யவில்லை என்றும் உடன் வந்த நண்பர் கோஹல் சிறிது தூரத்தில் நின்று முழு சம்பவத்தையும் தனது மொபைல் போனில் பதிவு செய்ததாக ஜடேஜா கூறினார். ஜடேஜா அல்லது கோஹெல் ஆகிய இருவருமே ஒரு டிக் டாக் வீடியோவை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு திட்டமிட்டு இதை உருவாக்கவில்லை.
வீடியோவைப் படமாக்கிய பின்னர், கோஹல் அதை தனது நண்பர்களிடையே பகிர்ந்துகொண்டார். பின்னர் அதை சமூக ஊடகங்களில் பரப்பினார். பின்னர் யாரோ ஒருவர் பஞ்சாபி பாடல் ஒன்றைப் பின்னணியில் சேர்த்து, வீடியோவைத் திருத்தி அதை டிக் டாக் வீடியோவாக மாற்றியுள்ளனர்.
இவர்கள் மீது காவல் ரிமாண்ட் வழங்க உள்ளூர் நீதிமன்றம் மறுத்துவிட்டதால் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்''.
இவ்வாறு காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.