Published : 04 Sep 2019 03:41 PM
Last Updated : 04 Sep 2019 03:41 PM

இந்திய யாத்ரீகர்கள் விசா இன்றி கர்தார்பூர் குருதுவாரா செல்லலாம்: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சில் ஒப்புதல்

புதுடெல்லி,

இந்திய யாத்ரீகர்கள் விசா இன்றி பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் சீக்கிய குருதுவாராவுக்கு கர்தார்பூர் வழித்தடத்தின் வழியாக செல்ல இரு நாடுகளுக்கு இடையே இன்று நடந்த மூன்றாவது கட்ட பேச்சு வார்ததையில் ஒப்பந்தம் ஆகியது.

கர்தார்பூர் வழித்தட பணிகள் தொடர்பாக மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையாக இது அமைந்தது. வாகா-அட்டாரி எல்லையில், இந்தியப் பகுதிக்கு உள்பட்ட அட்டாரியில் இக்கூட்டம் நடைபெற்றது

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது வாழ்நாளின் இறுதிக்காலத்தை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக, அங்கு தர்பார் சாஹிப் குருத்வாரா அமைக்கப்பட்டது.

சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் குருத்வாரா அமைந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தின் தேரா பாபா நானக் பகுதியிலுள்ள குருத்வாராவையும், கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையிலும், இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ளவும் இந்த வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்துக்கு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியா அமைக்கிறது. அதேபோல மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தான் அமைக்கிறது. பாதுகாப்பான யாத்திரையை உறுதிசெய்வதற்காக, ஜீரோ பாய்ண்ட் அருகே, இந்தியா பாலம் ஒன்றை கட்டி வருகிறது.

இந்நிலையில் இருதரப்பு அதிகாரிகள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் ஏற்கனவே இரு முறை நடந்துள்ளது. மூன்றாவது முறையாக அடாரி எல்லையில் இன்று நடந்தது. இதில் பாகிஸ்தான் தரப்பில் பாகிஸ்தான் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் தலைமையிலான குழு பங்கேற்று இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனையின் முடிவில் இந்தியாவில் இருந்து செல்லும் சீக்கியர்கள், யாத்ரீகர்கள் விசா இன்றி கர்தார்பூருக்குச் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய யாத்ரீகர்கள் செல்லும் போது இந்தியாவின் சார்பில் அதிகாரிகள் செல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. நாள் ஒன்றுக்கு இந்தியாவில் இருந்து 5 ஆயிரம் யாத்ரீகர்களை கர்தார்பூர் குருதுவாராக்குள் அனுப்புவதற்கு பாகிஸ்தான் சம்மதித்துள்ளது. இதுதவிர சிறப்புப் பண்டிகைகள், திருவிழாக்கள் ஆகியவற்றின் போதும் யாத்ரீகர்களை அனுப்புவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்த பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் நிருபர்களிடம் கூறுகையில், " கர்தார்பூர் வழித்தடத்துக்கான வரைவு ஒப்பந்தத்துக்கான இறுதிவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. நவம்பர் மாதம் திட்டமிட்டபடி பாகிஸ்தான் வழித்தடத்தை திறக்கும்" எனத் தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x