Published : 04 Sep 2019 03:15 PM
Last Updated : 04 Sep 2019 03:15 PM

கல்வியில் கவனம் செலுத்துங்கள்; போதைப்பொருளையும் ஆயுதங்களையும் விலக்கி வையுங்கள்: ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு ராணுவம் அறிவுரை

ஸ்ரீநகர்,

கல்வியில் கவனம் செலுத்துமாறும், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை விலக்கி வைக்குமாறும் காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய ராணுவம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாத்பவனா சுற்றுலாவுக்குப் பின்னர் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மத்தியில் ராணுவ கமாண்டர் கே.ஜி.எஸ்.திலான் இவ்வாறு பேசினார்.

அவர் மேலும் பேசும்போது, "மாணவர்களே, நீங்கள் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்தீர்கள். இது தேசத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் எவ்வாறு கல்வி கற்கிறார்கள்? நாட்டின் பிற பகுதிகளில் தொழில் எப்படி நடைபெறுகிறது? என்பதைத் தெரிந்து கொள்வதற்கான நல் வாட்ப்ப்பாக உங்களுக்கு அமைந்தது.

உங்கள் அனைவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் கல்வியில் கவனம் செலுத்துங்கள். போதை வஸ்துக்கள், ஆயுதங்களில் இருந்து விலகி இருங்கள். உங்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் பிரகாசமான எதிர்காலம் அமையும்.

நீங்கள் இந்தப் பயணத்தின் மூலம் கண்ட மாற்றங்களை காஷ்மீரிலும் ஏற்படுத்த விரும்புவீர்கள் என நான் நம்புகிறேன்" என்றார்.

ஆப்பரேஷன் சாத்பவனா என்ற பெயரில் இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாணவர்களை நாடு முழுவதும் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறது.

இதன் மூலம் நாட்டில் பரந்து விரிந்து கிடக்கும் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.

காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட 15 வயது நிரம்பிய சிறுவர்களைக் குறிவைத்து பிரிவினைவாத சக்திகள் மூளைச் சலவை செய்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x