உ.பி. மாநில காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி நியமனம்?

பிரியங்கா காந்தி : கோப்புப்படம்
பிரியங்கா காந்தி : கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி,

உத்தரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி விரைவில் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வரும் 2022-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்காக இப்போதிருந்தே தயாராகும் வகையில் பிரியங்கா காந்தி தலைவராகவும், புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மக்களவைத் தேர்தலுக்கு முன் கடந்த ஜனவரி மாதம் உ.பி. மாநிலத்தின் கிழக்குப் பகுதி பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை அப்போதைய தலைவர் ராகுல் காந்தி நியமித்தார். அவருடன் சேர்ந்து, உ.பி. மேற்குப் பகுதிக்கு ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. ராகுல் காந்தியும் அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி அடைந்தார். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ஜோதிர் ஆதித்ய சிந்தியா பொதுச் செயலாளர் பதவியையும், ராகுல் காந்தி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தனர்.

ஆனால், பிரியங்கா காந்தி தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் அவ்வப்போது மக்களைச் சந்திப்பதும், நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுவதும் என தனது பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள், தொழில் சிக்கல்கள் போன்றவற்றையும் சுட்டிக்காட்டி அவ்வப்போது ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார் பிரியங்கா காந்தி. மாநிலத்தில் செயலாக்கத்துடன் உள்ள அரசியல்வாதியாகவே பிரியங்கா காந்தி வெளிப்படுத்தி வருகிறார்.

இதனால், வரும் 2022-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தியை நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஏனென்றால், கடந்த 1989-ம் ஆண்டுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி உ.பி.யில் மலரவில்லை.

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைச் சேர்க்கும் வகையில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. உ.பி.யில் காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் புதிய தலைமையும், மாவட்ட அளவில் துணைத் தலைவர்களாக பெண் தலைவர்களும், இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்பும் கிடைக்கும் வகையில் கட்சியின் நிர்வாகிகள் குழு மாற்றம் பெற உள்ளது என்று மாநில நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக, பிரியங்கா காந்தி பல்வேறு தலைவர்களுடன் தீவிரமான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசி கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தி வருகிறார்.

கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சுதந்திரமாகச் செயல்படும் வகையில் தேவையான அதிகாரத்தை பிரியங்கா காந்தி வழங்கியுள்ளார். பெண்களை அதிக அளவில் அரசியலுக்குள் கொண்டு வரவும், விவசாயிகள் மத்தியில் கட்சியை எடுத்துச் செல்லவும் பிரியங்கா திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறார்.

குறி்ப்பாக, சாமானிய மக்கள் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் களைய அதிகமான ஆர்வத்துடன் பிரியங்கா காந்தி செயல்பட்டு வருகிறார். மாநிலத்தின் ஆணிவேர் பிரச்சினைகளைத் தீவிரமாக அலசி, ஆய்வு செய்து வருவதால், கட்சித் தலைவராக பிரியங்கா காந்தி வருவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in