கர்நாடக எம்எல்ஏ டி.கே.சிவக்குமார் கைதுக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் போராட்டம்; பள்ளி கல்லூரிகள் விடுமுறை
பெங்களூரு,
காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமாரை அமலாக்கத் துறையினர் பணமோசடி வழக்கு தொடர்பாக நேற்றிரவு கைது செய்ததைத் தொடர்ந்து இன்று கர்நாடகாவின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.
புதுடெல்லியில் கைது செய்யப்பட்ட கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான சிவக்குமார் இரண்டுமுறை அமைச்சராக இருந்தவர்.
அமலாக்கத்துறை அவர் மீது பணமோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. நான்காவது முறையாக விசாரணைக்ககாக டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தில் நேற்றிரவு அவர் நேரில் ஆஜரான நிலையில், சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.
சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கைதை எதிர்த்து ராமநகரா, சென்னப்பட்டனா மற்றும் அருகிலுள்ள சில நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் சாலைகளில் போக்குவரத்தைத் தடுக்கும் விதமாக டயர்களை எரித்துப்போட்டனர்.
சிவக்குமாரின் ஆதரவாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கனகாபுராவில் நேற்று இரவு அரசுப் பேருந்துகள் மீது கல் வீசிய சம்பவங்கள் நடந்தன.
சிவக்குமாரின் கனகபுரா சட்டப்பேரவை தொகுதி ராமநகரா மாவட்டத்தின் கீழ் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
கண்டனம்
சிவக்குமாரை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளதற்கு முன்னாள் முதல்வர்களான சித்தராமையா மற்றும் எச்.டி. குமாரசாமி உள்ளிட்ட மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
