

புதுடெல்லி,
சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வைப் பிரதமருடன் காண்பதற்கு நாடு முழுவதும் இருந்து 60 பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ராஜஸ்தானைச் சேர்ந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவியும் அடங்குவார். ராஜஸ்தானின் சுரு பகுதியைச் சேர்ந்த கரிமா சர்மா அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.
அவர் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி இஸ்ரோ நடத்திய ஆன்லைன் வினாடிவினா போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த ஆன்லைன் போட்டியில் ஒவ்வொரு மாநிலத்துக்கும், யூனியன் பிரதேசத்துக்கு 2 பள்ளிக் குழந்தைகள் என மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் கரிமாவும் ஒருவர். இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "இந்தத் தேர்வு அறிவிக்கப்பட்ட உடனேயே நான் விறுவிறுப்பாக ஆயத்தமானேன். இஸ்ரோ மையம், சந்திரயான் 1 விண்கலம், சந்திரயான் 2 விண்கலம் தொடர்பாக இணையத்தில் நிறைய தகவல்களைத் திரட்டிப் படித்தேன். அது எனக்கு உதவியாக இருந்தது. பிரதமருடன் வரலாற்று நிகழ்வை சேர்ந்து காணவுள்ளதை பெருமையாகக் கருதுகிறேன்" எனக் கூறியுள்ளார்.
தேர்வு செய்யப்பட்ட 60 மாணவர்களும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் வரும் 7-ம் தேதி (செப்டம்பர் 7) அன்று அதிகாலை 1.55 மணிக்கு சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும் நிகழ்வைபிரதமருடன் சேர்ந்து காணவுள்ளனர்.
2-வது வெற்றி..
இதற்கிடையில், சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள லேண்டரின் சுற்றுப்பாதையை இஸ்ரோ இன்று (புதன்கிழமை) இரண்டாவது முறையாகக் குறைத்தது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவியது. ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக் கெட் மூலம் இது விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து படிப்படியாக விலகிய சந்திரயான் 2, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
சந்திரயான் - 2 விண்கல ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டரைப் பிரிக்கும் நடவடிக்கை நேற்றுமுன் தினம் (செப்.2) வெற்றிகரமாக நிறைவேறியது.
தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விண்கலத்தை விலக்கி, அதன் வேகத்தை குறைத்து மெல்ல தரையிறங்கச் செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) அதிகாலை லேண்டரின் சுற்றுவட்டப்பாதை இரண்டாவது முறையாகக் குறைக்கப்பட்டது. இதற்காக இன்று அதிகாலை 3.42 மணியளவில் திட்டமிட்டபடி, அதன் என்ஜின் 9 வினாடிகள் இயக்கப்பட்டது. லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்பட்டதால் லேண்டர் நிலவை மேலும் நெருங்கியது.
தொடர்ந்து செப்டமபர் 7-ம் தேதி லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரை இறக்க ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.