Published : 04 Sep 2019 11:00 AM
Last Updated : 04 Sep 2019 11:00 AM

குண்டும் குழியுமான சாலையில் விண்வெளி வீரர் நடந்த வீடியோ: வைரலானதைத் தொடர்ந்து சீர் செய்யும் பணியில் அதிகாரிகள்

பெங்களூரில் குண்டும் குழியுமான சாலையில் விண்வெளி வீரர் ஒருவர் நடந்து சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்தச் சாலையை சீர் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

பெங்களூருவைச் சேர்ந்த பிரபல ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி. இவர் சமூகப் பிரச்சினைகளைத் தன்னுடைய ஓவியங்களின் மூலம் தொடர்ந்து பிரதிபலித்து வருகிறார்.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 1) அன்று தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோவில் விண்வெளி வீரர் ஒருவர் நிலவில் குண்டும் குழியுமான நிலத்தில் நடந்து சென்றதைப் போல் இருந்தது. அப்போது திடீரென கார்கள் அவரைக் கடந்து சென்றன. பின்புதான் பார்வையாளர்களுக்குப் புரிந்தது, அது நிலவு அல்ல பெங்களூருவின் மோசமான சாலைகள் என்று.

எந்தவித செயற்கை வெளிச்சங்களும் இல்லாமல் வெறும் செல்போன் கேமராவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது.

பெங்களூருவில் சாலை பிரச்சினைகள் அதிகமாக உள்ளன. அவற்றைச் சரி செய்யும் பணியும் மிகவும் மெதுவாக நடக்கிறது. கடந்த சில முறை வேகமாக செய்ததைப் போல இந்த முறையும் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று அந்த வீடியோ எடுத்ததற்கான காரணத்தை பாத நஞ்சுண்டசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட சாலையைச் சரி செய்யும் பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நஞ்சுண்டசாமி அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் நஞ்சுண்டசாமியின் இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வீடியோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x