

ஆகஸ்ட் 21ம் தேதி முதல் சிபிஐ காவலில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாட்டின் பொருளாதார நிலையைச் சுட்டிக்காட்டி 5% என்று கூறிவிட்டுச் சென்றார்.
உச்ச நீதிமன்றத்திலிருந்து அவர் வந்த போது நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டனர். பல்வேறு கேள்விகளைக் கேட்டாலும் ப.சிதம்பரம் ஒரு வார்த்தையில் 5% என்று பதிலளித்து விட்டுச் சென்றார்.
அப்போது தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் ப.சிதம்பரத்திடம், “15 நாட்களாக காவலில் இருக்கிறீர்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். இதற்கு ப.சிதம்பரம் ஒரே வார்த்தையில் ‘5%’ என்று கூறினார்.
உடனே நிருபர் ஜிடிபி என்று கேட்டார். ‘உங்களுக்குத் தெரியும் 5% என்றால் என்னவென்று, 5%-ஐ உங்களுக்கு நினைவில்லியா’ என்று சிதம்பரம் மீண்டும் கூறினார்.
நாட்டின் ஜிடிபி 5% ஆகக் குறைந்ததையடுத்து ப.சிதம்பரம் இவ்வாறு தெரிவித்ததாகக் காங்கிரஸ் கட்சியும் கருதுகிறது.
இந்த குறுகிய நேர வீடியோவை மறு ட்வீட் செய்த கார்த்தி சிதம்பரம் அதில், ‘பொருளாதார நிலை பற்றி ப.சிதம்பரம்’ என்று ஒரு வரியையும் சேர்த்துள்ளார்.
உடனேயே காங்கிரஸ் இந்த வீடியோவை தன் ட்விட்டரில் வெளியிட்டு, “ப.சிதம்பரத்தைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது? என்பதற்கான ப.சிதம்பரத்தின் ஒரு விரைவு நினைவூட்டல்” என்று பதிவிட்டுள்ளது.