

புதுடெல்லி,
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு வரும் 5-ம் தேதிவரை சிபிஐ காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது
ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் 5-ம் தேதிவரை சிதம்பரத்துக்கு சிபிஐ காவலை நீடித்தது.
ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க விருப்பமில்லை என்று சிபிஐ தெரிவித்த நிலையிலும், சிபிஐ காவலில் 5-ம் தேதிவரை காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வேறு உத்தரவு பிறப்பிக்க முடியாமல் வரும் 5-ம் தேதிவரை சிதம்பரத்துக்கு சிபிஐ காவலை நீட்டித்தது.
ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 12 நாட்களாக சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது
ப.சிதம்பரம் தரப்பில் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இடைக்கால ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ப.சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த சிபிஐ காவல் நேற்று முடிந்த நிலையில் கூடுதலாக ஒருநாள்(இன்று) நீட்டித்து நீதிபதி குகர் நேற்று உத்தரவிட்டார்
இந்நிலையில் ப.சிதம்பரத்தை இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், " ப.சிதம்பரத்தை வரும் 5-ம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவையும், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது" என்று கூறி அதை அளித்தார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாத நிலையில் நீதிபதி அஜய் குமார் குகர் " ப.சிதம்பரத்தை வரும் 5-ம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்கவும், செப்டம்பர் 5-ம் தேதி சிதம்பரத்தை ஆஜர்படுத்த வேண்டும் " என்று உத்தரவிட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி ப.சிதம்பரத்தின் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் கபில் சிபல், சிபிஐ நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் குறித்து எந்த கோரிக்கையையும் நீதிபதியிடம் எழுப்பவில்லை.
இந்த வழக்கின் விசாரணையின் போது ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
பிடிஐ