

ஆம் ஆத்மி அதிருப்தி எம்.எல்.ஏ., அல்கா லம்பா காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற எதிர்பார்பு அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்ததால் வலுத்திருக்கிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. கடந்த 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா வெற்றி கண்ட ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த தேர்தல் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இதற்கு முக்கியக் காரணமாக, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் விலகியது சுட்டிக்காட்டப்படுகிறது.
அதிருப்தியாளர்கள் வரிசையில் கடந்த சில நாட்களாக சொந்த கட்சியை விமர்சித்து வருகிறார் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர் அல்கா லம்பா. கடந்த ஏப்ரல் மாதம் அவர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகினார். அர்விந்த் கேஜ்ரிவாலுடன் ஏற்பட்ட கருத்து மோதலே காரணம் என்றார். , டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கப்போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
ஆனால், சமீப காலமாகவே அவர் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்தார். சுமார் 50 நிமிடங்கள் அவர் சோனியாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை. எனினும், காங்கிரஸ் கட்சியில் அல்கா இணைவார் என எதிர்பார்ப்பு வலுத்திருக்கிறது.
ஆம் ஆத்மியில் இணைவதற்கு முன்னதாக அல்கா லம்பா காங்கிரஸ் கட்சியின் மகளிரணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏஎன்ஐ