

புதுடெல்லி,
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவால் சிதம்பரத்திற்கு திஹார் சிறை இல்லை என்பது உறுதியான நிலையில், இடைக்கால ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்ததலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதுவரை 13 நாட்கள் சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்துவருகிறார்.
சிபிஐ தன்னை கைது செய்தது தவறு என்றும், கைது ஆணையை ரத்து செய்யக் கோரி ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, போபண்ணா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் நேற்று சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்கள், அதேபோல சிபிஐ தரப்பி்ல கூடுதல் சொலிசிட்டர் கே.எம்.நடராஜ் ஆஜராகி வாதாடினார்.
கபில் சிபல் வாதத்தில் சிதம்பரத்தை திஹார் சிறைக்கு அனுப்பக்கூடாது, வீட்டுக்காவலில் வைக்க வேண்டும், அவரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதைச் செய்ய வேண்டும், என்று வாதாடினார். ஆனால், அதற்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி பானுமதி அமர்வு, " ப.சிதம்பரத்தை வீட்டுக்காவலில் வைக்க அவர் அரசியல் கைதி இல்லை என்றும், உரிய விசாரணை நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமீனுக்கு அவர் முறையிடலாம். ஆனால் ஜாமீன் வழங்க மறுக்கும் பட்சத்தில் சிபிஐ காவலை 5-ம் தேதிவரை நாங்கள் நீட்டிக்கிறோம்" என்று தெரிவித்தனர்.
இதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மாலை சிதம்பரத்தை சிபிஐ ஆஜர்படுத்தியது. இடைக்கால ஜாமீன் கோரிய சிதம்பரம் தரப்பு வாதத்தையும், சிபிஐ தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கவுர், சிதம்பரத்துக்கான காவலை மேலும் ஒருநாள் (இன்றுவரை) நீட்டித்தார். இன்று மாலை சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் மீண்டும் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
இதற்கிடையே சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் இல்லாத கைதுவாரண்ட் கொடுத்திருப்பதை எதிர்த்து சிதம்பரம் தரப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணை நீதிபதி பானுமதி, ஏஎஸ் போண்ணா தலைமையிலான அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், " ப.சிதம்பரத்தை இனிமேல் காவலில் எடுத்து விசாரிக்க விருப்பமில்லை. ஆதலால் அவரை நீதிமன்ற காவலில் அனுப்பலாம்" எனத் தெரிவித்தார்.
நீதிபதிகள் பானுமதி, போபண்ணா, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபலிடம், இடைக்கால ஜாமீன் கோரி, விசாரணை நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். ப.சிதம்பரத்துக்கான சிபிஐ காவலை 5-ம் தேதிவரை நீட்டிக்கிறோம். அன்று சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீனில் வெளிவராத கைது வாரண்டை ரத்து செய்வது, கைது செய்ததற்கு எதிரான மனு ஆகியவற்றை விசாரிக்கிறோம்.
ஒருபோதும் விசாரணை நீதிமன்றத்தின் நீதி அதிகாரத்தை, சட்டவிரோதமாக, அடக்குமுறையில் அபகரிக்கக் கூடாது என்ற ரீதியில் நாங்கள் மிகுந்த விழிப்புணர்வுடன்தான் இருக்கிறோம்" என உத்தரவிட்டனர்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டதுபோல், சிபிஐ விசாரணை நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் மறுக்கும்பட்சத்தில் 5-ம் தேதிவரை ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தது நடைமுறைக்கு வந்துள்ளது.
இன்று மாலை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். அப்போது, இடைக்கால ஜாமீன் குறித்து நீதிபதி இன்று முடிவு அறிவிக்க உள்ளார். ஒரு வேளை சிபிஐ விரும்பாத பட்சத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்படலாம், அல்லது வழங்காத பட்சத்தில் ப.சிதம்பரத்துக்கு 5-ம் தேதிவரை சிபிஐ காவல் இருக்கும்.
மொத்தத்தில் நீதிமன்ற காவலில் அவருக்கு திஹார் சிறை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
பிடிஐ