

புதுடெல்லி,
நாட்டில் வரலாறுகானாத பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளுங்கள், 100 முறை சொன்னாலும் பொய் உண்மையாகாது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சாடியுள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. முதல் காலாண்டில் குறிப்பாக உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்தது.
பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு இதே ஜுலை மாதத்தில் இந்த 8 துறைகளின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 2.1 சதவீதம் மட்டுமே இருக்கிறது
மேலும், ஆட்டோமொபைல் துறையின் ஆகஸ்ட் மாத விற்பனையில் அனைத்து நிறுவனங்களின் விற்பனையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை அந்தந்த நிறுவனங்கள் வெளியிட்டுவரும் புள்ளி விவரங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
ஆனால் மத்திய அரசோ பொருளாதார மந்தநிலை ஏற்படவில்லை, சரிவு ஏற்படவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பொருளதார சரிவு ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டு அதை சரிசெய்வதற்கான வழிகளை மத்திய அரசு காண வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ள கருத்தில் " நூறு முறை மீண்டும் பொய்களை திரும்ப திரும்பப் கூறினாலும், அது உண்மையாகாது. பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதை பாஜக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொருளாதார சிக்கல்களை இப்போது சந்திக்கிறோம்.
பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளையும், வாய்ப்புகளையும் மத்திய அரசு பார்க்க வேண்டும். இந்த பொருளாதார மந்தநிலை அனைவருக்குமானதுதான். எத்தனை நாட்களுக்குதான் இந்த அரசு மந்தநிலை இல்லை எனும் வார்த்தையை கூறி சமாளிக்க முடியும்." என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிடிஐ