Published : 03 Sep 2019 11:21 AM
Last Updated : 03 Sep 2019 11:21 AM

இந்திய விமானப்படையில் அப்பாச்சே ரக ஹெலிகாப்டர்கள் இணைப்பு: உளவு, துல்லிய தாக்குதல் என பல அம்சங்களைக் கொண்டது

பதான்கோட்,

இந்திய விமானப்படையில் அமெரிக்க தயாரிப்பான அப்பாச்சே ஏஎச்-64 E ரக போர் ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டன.

முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டில் அப்பாச்சே AH-64 E ரக போர் ஹெலிகாப்டர்கள் வாங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. 35 ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு 22 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள ஹெலிகாப்டர்கள் 2020-க்குள் வாங்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் இன்று முதற்கட்டமாக இவற்றில் 8 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன.

இவை, பதான்கோட் விமானப்படை தளத்தில் விமானப் படை தளபதி பி.எஸ்.தானோ முன்னிலையில் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. அதற்கு முன்னதாக சிறிய பூஜையும் நடைபெற்றது.

இதுவரை ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ.35 ரக போர் ஹெலிகாப்டர்களே இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் உள்ளதால் புதிய ஹெலிகாப்டர்கள் இணைக்கப்படுகின்றன.

அப்பாச்சே ரக ஹெலிகாப்டர்களில் அதிநவீன சென்ஸார்கள் உள்ளன. இவை தாழ்வாக, அதே நேரத்தில் அதிவேகமாக பறக்கும்போதும் துல்லியமாக தனது இலக்கைக் கண்டறியக்கூடியவை. எதிரி நாட்டு கண்காணிப்பு வளையத்தில் எளிதில் சிக்காதவை.

இவ்வகை ஹெலிகாப்டர்கள், அவற்றை இயக்கும் கமாண்டருக்கு உளவு பார்ப்பது, பாதுகாப்புப் பணியை மேற்கொள்வது, தேவைப்படின் சேதம் ஏற்படுத்தும் தாக்குதலை நடத்துவது என எல்லாவிதத்தில் உதவும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் 8 ஏவுகணைகள் வரை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. இதில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி துப்பாக்கி மூலம் 1200 முறை சுடலாம். இதில் பொருத்தப்பட்டுள்ள டேட்டா நெட்வொர்க்கிங் மூலம் போர்க்களத்திலிருந்து புகைப்படங்களைப் பெறுவதுடன் களத்திற்கு இலக்குகளை புகைப்படம் எடுத்தும் அனுப்பலாம். தாக்குதலைத் தாண்டி உளவு வேலைக்கும் இந்த ரக ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

தரைப்பகுதி மட்டுமல்லாமல் கடற்பகுதியிலும் பயன்படுத்தக்கூடியது. இந்த ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு தேவையான பயிற்சியை முதல்கட்ட குழு 2018-ல் அமெரிக்காவில் முடித்துத் திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு இந்த ரக ஹெலிகாப்டர்களை விற்பனை செய்துள்ளது. இதுவரை சுமார் 2000 அப்பாச்சே ஹெலிகாப்டர்களை அந்நாடு விற்றுள்ளது. இந்த ஹெலிகாப்டர் விற்பனையில் இந்தியா அமெரிக்காவின் 16-வது வாடிக்கையாளர்.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x