சிறைக்குள் கேக் வெட்டி, மட்டன் குழம்பு பரிமாறி பிறந்த நாளைக் கொண்டாடிய கொலைக் குற்றவாளி

சிறைக்குள் கேக் வெட்டி, மட்டன் குழம்பு பரிமாறி பிறந்த நாளைக் கொண்டாடிய கொலைக் குற்றவாளி
Updated on
1 min read

சிதாமரி

சிறைக்குள் கேக் வெட்டி, மட்டன் குழம்பைப் பரிமாறி கொலைக் குற்றவாளி ஒருவர், தனது பிறந்த நாளைக் கொண்டாடியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் பிஹாரில் உள்ள சிதாமரி சிறையில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''பிண்டு திவாரி என்னும் கொலைக் குற்றவாளி, தர்பாங்காவில் இரண்டு பொறியாளர்களைக் கொலை செய்ததற்காக, ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளவர். அவருக்குச் சமீபத்தில் பிறந்த நாள் விழா வந்தது. அதைக் கொண்டாடத் திட்டமிட்ட அவர், கேக் மற்றும் மட்டன் குழம்புடன் பிறந்த நாளை வரவேற்றார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை இரவு ஒரு வீடியோ வைரலானது. அதில், திவாரி பிறந்த நாள் கேக்கை வெட்டி சக கைதிகளுக்கு ஊட்டுகிறார். மட்டன் குழம்பை சாதத்தில் ஊற்றி, அவர்களுக்குப் பரிமாறுகிறார். சக கைதிகள் வண்ணக் காகிதம் சுற்றப்பட்ட பொருட்களைப் பிறந்த நாள் பரிசாக அளிக்கின்றனர். மேலும் சிலர் தங்களது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்'' என்று தெரிவித்தார்.

வீடியோ வைரலான நிலையில், இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எப்போது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.

யார் இந்த திவாரி?

முகேஷ் பதக் என்னும் குழுவைச் சேர்ந்த ஷூட்டரான திவாரி, பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்குப் பெயர் போனவர். அவரின் தலைக்கு ரூ.50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பாட்னாவில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in