

புதுடெல்லி
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டவர்களுக்கு உதவ சட்ட உதவி மையங்கள் ஏற்படுத்துமாறு அசாம் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிபட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு பட்டியலில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இறுதிபட்டியலில் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு பட்டியலில் பெயர் விடுபட்ட 3,68,000 பேர் ஏற்கெனவே விண்ணப்பிக்கவில்லை அவர்களையும் சேர்த்து மொத்தம் 19,06,657 பேர் இறுதிபட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில் நீக்கப்பட்ட 22 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
முறையான இந்திய குடிமக்கள், அகதிகள், பழங்குடி மக்கள் பெயர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டுளள்ளதாக அம்மாநில அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. விடுபட்டவர்கள் தீ்ர்ப்பாயங்களில் முறையிட்டு தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் அவற்றை சரி செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அசாம் மாநில அரசை உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக ட்விட்டர் பக்கத்தில் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளதாவது:
‘‘அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள எல்லாவித உரிமையும் உண்டு. சட்டரீதியாக தீர்ப்பாயங்களை அணுகி விண்ணப்பிக்க முடியும். இதற்காக சட்ட உதவி மையங்களை அமைக்குமாறு அசாம் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் இந்த சட்ட உதவி மையங்கள் செயல்படும். பெயர் விடுப்பட்டோர் இதன் மூலம் சட்ட உதவியை பெற்று தங்கள் பெயரை மீண்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இணைத்துக் கொள்ளலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது